காசியில் நடைபெற்ற தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவையை சேர்ந்த துளசி அம்மாளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டின் பன்முகத்தை காக்க இத்தகைய ஒற்றுமை உணர்வு ஊக்குவிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி காசியில் நடைபெற்றது. இதில் பங்கேற்க, தமிழகத்தின் 12 இடங்களிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 2,500 பேர் ஆன்லைனில் பதிவு செய்து சென்றிருந்தனர். பின்னர் தமிழ் சங்க நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய அனைவரும், இந்த தமிழ் சங்கம் தொடர்பான தங்களது கருத்துகளை பாரத பிரதமர் மோடிக்கு கடிதமாக எழுதி அனுப்பினர்.
இந்நிலையில், சூலூர் முத்துகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த துளசி அம்மாள் மற்றும் ராஜாமணி ஆகியோர் காசி தமிழ் சங்க நிகழ்வுக்கு சென்றிருந்தனர். அவர்களும் பிரதமர் மோடிக்கு காசி தமிழ் சங்க நிகழ்வு குறித்து கடிதம் எழுதி இருந்தனர். இதற்கு பதில் அனுப்பும் விதமாக பிரதமர் மோடி, தமிழில் பதில் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், இந்தியா ஒரு பன்முக தன்மை கொண்ட நாடு. ஒவ்வொருவரின் உணர்வாக இருக்கக்கூடியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கலாச்சாரத்தை ஒன்றிணைப்பது மத்திய அரசின் நோக்கம். காசி தமிழ் சங்கத்துக்கு கொடுக்கப்பட்ட அன்பும், அரவணைப்பும் மதிக்கக் கூடியது. நாட்டின் ஒற்றுமையை ஒன்றிணைப்பது இது போன்ற முயற்சிகள் மூலம் இரட்டிப்பாகும் என கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய துளசிஅம்மாள், காசி தமிழ் சங்க நிகழ்வுக்கு சென்றது பெரும் மன மகிழ்ச்சி தருகிறது. காசி தமிழ் சங்கத்திற்கு சென்றபோது அங்குள்ள கோவில்கள், ராமர் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று தரிசிக்க முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அங்குள்ள மக்கள் தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகள் தமிழர்களையும், தமிழையும் வளர்க்க உதவும். பிரதமர் மோடிக்கு காசி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்த கடிதத்தை அனுப்பி இருந்தோம். அதற்கு பதில் அனுப்பும் விதமாக, பிரதமர் மோடி பதில் கடிதம் அனுப்பி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.