கோவையில் உலக ஆட்டிசம் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் நடனமாடி பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்லூரி அரங்கில் உலக ஆட்டிசம் தினத்தையொட்டி, ஆட்டிசம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கௌமார பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட ஆட்டிசம் குறைபாடுடைய சிறப்பு குழந்தைகள் பங்கேற்றனர்.
முன்னதாக, சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளிட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள், ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. அதில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் போட்டிகளில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பங்கேற்று அசத்தினர்.
இந்த விழாவில் சிறப்பு குழந்தைகள் பாடல் இசையுடன் ஆடிபாடினர். அவர்களை பெற்றோர் மற்றும் பார்வையாளர்கள் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கௌமார மடாலயம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர், சங்கர் வானவராயர் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தனர்.