மே.18
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் 5 அடி நீள சாரைப்பாம்பு திடீரென நுழைந்ததால், அச்சமடைந்த பணியாளர் தெறித்து ஓடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செல்போன் கடை, தேநீர் கடை போன்ற கடைகள் உள்ளன. இந்த நிலையில், நேற்று மாலை செல்போன் கடைக்குள் புகுந்த சுமார் 5 அடி சாரைப்பாம்பு, செல்போன் ரேக் வழியாக நகர்ந்து, கடையில் அமர்ந்திருந்த பணியாளரின் கைக்கு இடையில் சென்று கால் அருகே நெளிந்துள்ளது. அப்போது பாம்பை பார்த்து பதறிப்போன பணியாளர், கடையிலிருந்து பின்னங்கால்கள் பிடரியில் அடிக்க ஓடினார்.
இதையடுத்து, அந்த பாம்பு செல்போன் கடைக்குள் இருந்த ஓட்டை வழியாக வெளியே சென்றது. இந்த நிலையில் செல்போன் கடை ரேக் வழியாக பாம்பு நகர்ந்து செல்வதும், கடையின் ஊழியர் அதிர்ச்சியில் ஓடுவது போன்ற பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இந்த செல்போன் கடைக்கு பின்புறமாக பொதுக்கழிப்பிடம் மற்றும் சிறைச்சாலை வளாகத்துக்கு சொந்தமான இடம் இருப்பதனால், அங்கிருந்து இந்த பாம்பு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.