மே.12
கோவை துடியலுர் பகுதியைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, உறவினர்கள் வீடு, ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மார்ட்டின் குழும நிறுவன அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை செய்தனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை குறித்த வழக்கில் பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளா, சிக்கிம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் சில நிபந்தனைகளுடன் அனுமதியளிக்கப்பட்டு லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த மாநிலங்களில் நடைபெற்று வரும் லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக மார்ட்டின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த சில ஆண்டுகளில் 2 முதல் 3 முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மீண்டும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக பிரபல தொழிலதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் உள்ள மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தில் 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 11 மணி முதல் சோதனை மேற்கொண்டனர்.
முன்னதாக கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனை வெள்ளகிணறு பிரிவு பகுதியில் உள்ள அவரது வீடு ஆகியவற்றிலும் தனித்தனியே அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். மத்திய ரிசர்வ் போலீஸ் சோதனையுடன் இந்த மூன்று இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில் கேரள மாநிலத்தை சேர்ந்த அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.