கோவையில் 7 அடி உயர வ.உ.சி சிலை..! முதலமைச்சர் திறந்துவைக்க ஏற்பாடு..!!

ஏப்ரல்.29

கோவையில் மாநகராட்சி சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 7அடி உயர முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை விரைவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது செக்கு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு சித்ரவதைகளுக்கு அவர் ஆளாக்கப்பட்டார். அவரது தியாகத்தை நினைவு கூறும் வகையில், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.க்கு, கோவையில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021-ம் ஆண்டு அறிவித்திருந்தார்.

அதன்படி, கோவை மாநகராட்சி சார்பில், வ.உ.சி. மைதானத்தில் அவிநாசி சாலையை ஒட்டிய இடத்தில் 50 அடி அகலம், 45 அடி நீளமுள்ள இடம் வ.உ.சியின் சிலை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரூ.40 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறையின் சார்பில், வ.உ.சி.க்கு முழு உருவ உலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. தரையிலிருந்து 4 அடி உயரத்திற்கு மேடை அமைக்கப்பட்டு, அதன்மீது 7 அடி உயரத்தில் பீடம் அமைத்து, 7 அடி உயரத்துக்கு வ.உ.சியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை ராமாவரம் பகுதியில் உள்ள சிலை தயாரிக்கும் மையத்திலிருந்து உலோகத்தாலான இச்சிலை செய்யப்பட்டு, இங்கு வைக்கப்பட்டுள்ளது. மேடை பகுதியில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த சிலையை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவோ அல்லது காணொளி வாயிலாகவோ திறந்துவைப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *