கோவை மாவட்டத்தில் உள்ள கோவைக் குற்றாலத்தில் கொளுத்தும் கோடையைச் சமாளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து, அருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.
கோவை உட்பட தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடைக்காலம் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். பல மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டிக் கொளுத்தும் வெப்பத்தால் குழந்தைகள், முதியவர்கள் என பல தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.
கோடையின் கொடுமையிலிருந்து தப்பிக்க, பழச்சாறு உள்ளிட்ட குளிர்பானங்களை தேடி மக்கள் அதிக அளவில் செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், விடுமுறை நாளான நேற்று, கோவையின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கோவை குற்றாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க குழந்தைகளுடன் குடும்பமாகவும், இளைஞர்கள் நண்பர்களோடும் சேர்ந்து, கோவை குற்றால அருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். கூட்டம் அதிகமாகக் காணப்பட்டதால், அருவியில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 20ம் மேற்பட்ட வனத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.