ஜூன்.5
தமிழகத்தில் கோவை, நீலகிரி,சேலம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்தியப் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூன் 5) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நாளையும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று நீலகிரி,கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்யவாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஜூன் 7, 8-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், சென்னைமற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் (ஜூன்.5,6) மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.