ஜுன் 28, ஐதராபாத்-சென்னை இடையே ஓடும் சென்னை எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் 12604 ) செவ்வாய்க்கிழமை அங்கிருந்த புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அந்த ஆபத்து உருவானது. அதிகாலை 5.55 மணிக்கு அந்த ரயில் சென்ட்ரல் நிலையத்தை அடைந்து விடுவதற்காக வேகமாக வந்து கொண்டிருந்தது.
அப்போது முன்பதிவில்லாத பெட்டியில் இருந்த பயணி ஒருவர் அபாய சங்கிலியை இழுத்ததால் சென்னை எக்ஸ்பிரஸ் சூல்லூர்பேட்டை – அக்கம்பேட்டை இடையில் உள்ள கலிங்க ஆற்று பாலத்தின் நடுவிலேயே நின்றுவிட்டது. என்ஜினில் இருந்த பணியாளர்கள் பாலம் என்பதால் கீழே இறங்கி அபாயச் சங்கில் இழுக்கப்பட்ட ரயில் பெட்டியை அடைய முடியவில்லை. இதனால் இழுக்கப்பட்ட சங்கிலியை சரி செய்ய இயலாமல் போனது.
பாலத்தின் மீது ரயில் திடீரென நின்றதால் பயணிகள் பதறிப்போனார்கள். என்ன,ஏது என்று கீழே இறங்கி விசாரிக்கவும் முடியவில்லை.
ஆபத்தை உணர்ந்து கொண்ட ரயில்வே காவல் துறையினர் அங்கே ஆற்றுப் படுகையில் பணியில் ஈடுபட்டிருந்த ஜே.சி.பி. இயந்திரத்தை கொண்டு வந்தனர். அதன் பிறகு ரயில்வே கான்ஸ்டபிள் ராகுல், ஜே.சி.பி. இயந்திரத்தின் முன்னிருக்கும் தொட்டியில் ஏறி ரயில் பெட்டிக்குள் நுழைந்து அபாய சங்கிலியை சரி செய்தார். இதன் பிறகு ரயில் பெருத்த தாமதத்துடன் புறப்பட்டு சென்னைக்கு வந்தது.
இதையடுத்து தேவையில்லாமல் அபாய சங்கிலியை இழுக்க வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் பயணிகளைக் கேட்டுக்கொண்டு உள்ளது. அபாயச் சங்கிலி வசதியை தவறாகப் பயன்படுத்துவது ரயில்வே விதிகளின்படி குற்றச் செயலாகும். அவசரத் தேவை இல்லாமல் சங்கிலியை இழுத்தால், ரயில்வே சட்டத்தின் 141- வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்., அவருக்கு 500 ரூபாய் அபராதம் அல்லது மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே எச்சரிக்கை விடுத்து உள்ளது.
000