ஆகஸ்டு,25-
சிறு,சிறு வேடங்களில் நடித்து வந்த சத்யராஜை தமிழகம் முழுவதும் அடையாளம் காட்டிய படம் ‘நூறாவது நாள்’. வில்லன் வேடத்தில் கலக்கி இருந்தார்.தொடர்ந்து சில படங்களில் வில்லனாகவே நடித்தார்.பாரதிராஜா இயக்கிய கடலோர கவிதைகள் சத்யராஜின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்தியது.
சினிமாவில் 40 ஆண்டுகளாக தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.பாகுபலி திரைப்படம் சத்யராஜை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றது. ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின் நடிகர்கள் வில்லன் வேடங்களை ஏற்பதில்லை.ஆனால் சத்யராஜ், புதிய படம் ஒன்றில் வில்லனாக நடிக்கிறார்.
அந்தப்படம், ‘அங்காரகன்’. ஸ்ரீபதி ஹீரோவாக நடித்துள்ளார்.இதில் மீண்டும் வில்லனாக சத்யராஜ் நடித்துள்ளார். அவருக்கு போலீஸ் அதிகாரி வேடம். அடுத்த மாதம் 8ம் தேதி திரைக்கு வரும் இந்த படம் குறித்து சத்யராஜ் தெரிவித்த தகவல்:
“அங்காரகன் பட டைரக்டர் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, இந்தப்படத்தில் உங்களுக்கு வில்லன் வேடம். சம்மதமா?’ என்று கேட்டார். படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனது கேரக்டரில் வித்தியாசமான நடிப்பையும், மேனரிசங்களையும் வெளிப்படுத்த நல்ல ஸ்கோப் இருந்தது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ படத்தில் நடிக்க சம்மதித்தபோது தயக்கம் இருந்தது என்றாலும், துணிச்சலுடன் ஒப்புக்கொண்டு நடித்தேன். படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.
வில்லனாக மீண்டும் நடிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை. ‘வால்டர் வெற்றிவேல்’, ‘அமைதிப்படை’ ஆகிய படங்களில் நடித்த நேரத்தில் சினிமா என் கையில் இருந்தது. இப்போது நான் சினிமாவின் கையில் இருக்கிறேன். அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். தற்போது தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறேன். என் கையில் 20 படங்கள் இருக்கின்றன’’ என்று மனம் திறந்தார், புரட்சி தமிழன்.
வீட்டில் சொல்லி திருஷ்டி சுத்தி போடுங்க சார்..
000