செப்டம்பர்,14-
ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பிரதான எதிர்க்கட்சியாக தெலுங்கு தேசம் உள்ளது. அந்த கட்சியின் தலைவரான முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் கைது செய்யப்பட்டார்.
2014 ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டுக் கழகத்தில் 300 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களை சந்தித்துள்ள சந்திரபாபு நாயுடு, இப்போது தான் முதன் முறையாக கைது செய்யப்பட்டு சிறையில் வாடுகிறார்.
சந்திரபாபு நாயுடு ஜெயிலில் இருப்பது, ’ஜெயிலர்’ரஜினிகாந்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் நெருக்கமான நண்பர்கள். ரஜினிகாந்த் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சந்திரபாபு நாயுடு தவறாமல் கலந்து கொள்வார். அதேபோல், ஆந்திரா செல்லும் போது ரஜினி,சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் ‘என்டிஆர் நூற்றாண்டு’ நிகழ்ச்சி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நடத்தப்பட்டது.அதில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேடையில் அவர் சந்திரபாபு நாயுடுவை வானளாவ புகழந்தார்.
“எனக்கு 30 ஆண்டு கால நண்பர் சந்திரபாபு .இந்திய அரசியல் மட்டுமின்றி உலக அரசியலிலும் அனுபவம் வாய்ந்தவர். அரசியலில் அவர் ஒரு தீர்க்கதரிசி”என பாராட்டு பத்திரம் வாசித்தார்
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைது குறித்து அவரது மகன் நாரா லோகேஷிடம் ரஜினிகாந்த் விசாரித்துள்ளார் லோகேஷுக்கு அவர் ஆறுதல் கூறினார்.. “தைரியமாக இருங்கள். என்னுடைய நண்பர் சந்திரபாபு நாயுடு எந்தத் தவறையும் செய்திருக்கமாட்டார். அவர் செய்த நலத்திட்ட உதவிகளும், வளர்ச்சி திட்டங்களும் சட்டவிரோத கைதிலிருந்து அவரை பாதுகாக்கும். 24 மணிநேரமும் மக்களுக்காக பாடுபட்ட அவரின் உழைப்பும், அர்ப்பணிப்பும்ஒருபோதும் வீண்போகாது.’ என லோகேஷிடம் ரஜினி தெரிவித்துள்ளார்.
ராஜமுந்திரி ஜெயிலுக்கு நேரில் ஒரு விசிட் அடிக்க வேண்டியது தானே சார்!
000