பாபா படத்தின் தோல்வியால் ரஜினிகாந்த் துவண்டிருந்த நேரம் அது.கன்னடத்தில் தான் இயக்கி வெற்றிபெற்ற படத்தின் கதையை ரஜினிக்கு சொன்னார்,டைரக்டர் பி.வாசு. ரஜினியை அந்தக்கதை ரொம்பவே ஈர்த்தது. அடுத்த நொடியே ஓகே சொல்லிவிட்டார்.
அந்த கதையை நடிகர் பிரபுவிடமும் பகிர்ந்திருந்தார் வாசு.அப்புறம் தான் அந்த மேஜிக் நிகழ்ந்தது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபுவே படத்தை தயாரிக்க சந்திரமுகி என படத்துக்கு பெயர் சூட்டினார்கள்.2005 ஆண்டு கமலின் மும்பை எக்ஸ்பிரஸ், விஜயின் சச்சின் ஆகிய படங்களோடு ரிலீஸ் ஆன சந்திரமுகி வசூலில் புதிய சாதனை படைத்தது.
சந்திரமுகியின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆசைப்பட்ட வாசு,ரஜினியை அணுகினார். அவர், தனது படங்கள் இரண்டாம் பாகமாக எடுக்கப்படுவதில் உடன்பாடு இல்லாதவர்.அப்படியே உருவானாலும் தான் அதில் நடிப்பதில்லை என்பதில் தீர்மானமாக இருப்பவர்.( விதி விலக்கு,எந்திரன்)
பில்லா இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டபோது, ரஜினி மறுத்ததால் அஜித் ,பில்லா ஆனார்.இப்போது-சந்திரமுகி -2.
இயக்கம் பி.வாசு, நகைச்சுவை வடிவேலு என்பதைத்தவிர ரஜினியின் சந்திரமுகிக்கும், அதன் இரண்டாம் பாகத்துக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. சந்திரமுகியை தயாரித்தது சிவாஜி நிறுவனம். இதனை தயாரிப்பது லைகா.
ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ், ஜோதிகாவுக்கு பதிலாக கங்கனா ரணாவத். அந்த படத்துக்கு வித்யாசாகர் இசை அமைத்தார். இதற்கு கீரவாணி.
படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 19 ஆம் தேதி சந்திரமுகி ரிலீஸ் ஆகிறது. ஆம்.விநாயகர் சதூர்த்தி அன்று வேட்டையன் வருகிறார்.
‘மகா கணபதி’பாடலோடு ராகவா லாரன்ஸ் அறிமுகம் ஆவாரோ?
000