ஆகஸ்டு,17-
’பாபா’படத்தின் தோல்வியினால் துவண்டிருந்த ரஜினிகாந்த், தனது அடுத்த ‘இன்னிங்ஸ்’சை தொடங்க புதியபாதை அமைத்து கொடுத்த படம் ‘சந்திரமுகி’. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படத்தை பி.வாசு இயக்கினார். ரஜினிக்கு நிகராக வடிவேலுவின் கேரக்டர் உருவாக்கப்பட்டிருந்தது. 2005- ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி, .சென்னை சாந்தி தியேட்டரில் ஒரு ஆண்டை தாண்டி ஓடியது. தமிழகம் முழுவதும் வசூலிலும் சாதனை படைத்தது.
இதற்கு பின் பி,வாசு டைரக்டு செய்த எந்த படமும் ஓடவில்லை. இதனால் சந்திரமுகி இரண்டாம் பாகத்தை உருவாக்கி, தனது இருப்பை பதிவு செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தார், வாசு. தனது படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்திருப்பவர், ரஜினி.
எனவே ரஜினியின்’வேட்டையன்’ கதாபாத்திரத்தில், ராகவா லாரன்சை நடிக்க வைத்து ‘சந்திரமுகி-2’பாகத்தை பி.வாசு, எடுத்து முடித்துள்ளார்.கங்கனா ரணாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முதல் பாகத்தில் முருகேசன் எனும் கேரக்டரில் நடித்த வடிவேலு.இரண்டாம் பாகத்திலும் அதே வேடம் பூண்டுள்ளார். இந்தப்படத்துக்கு அண்மையில் வடிவேலு டப்பிங் பேசி முடித்துள்ளார். டப்பிங் வீடியோவை படநிறுவனம் ‘எடிட்’செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில்,’’ சந்திரமுகி பத்து பாகம் வந்தாலும் சந்திரமுகியின் பெஸ்ட் பிரண்டு நான்தான்’ என்று வடிவேலு கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
சந்திரமுகி ; திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
வேட்டையன் மீண்டும் வசூல் வேட்டை நடத்துவாரா?
000