ஆகஸ்டு,24-
சந்திராயன் 3 விண்கலத்தின் ரோவார் நிலவில் தனது ஆய்வுப் பணியை சிறப்பாக செய்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இந்தப் பணி இன்னும் 14 நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. ரோவார் அவ்வப்போது எடுத்து அனுப்பும் படங்களை பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சந்திராயன் 3 நேற்று மாலை நிலவில் இறங்கிய அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரதமர் மோடி நேரலையில் தோன்றி பேசியது, அந்த சாதனை தமது அரசின் சாதனை என்று சொந்தம் கொண்டாடும் முயற்சியாகும் என்ற விமர்சனங்கள் எழுந்து உள்ளன.
மேலும் மோடியின் பேச்சுக்குப் போட்டியாக ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது கடந்த 1952- ஆம் ஆண்டில் இந்தியா, விண்வெளி ஆராய்ச்சியை தொடங்கியது.அதனால் தான் இப்போது நிலவுக்கு சந்திராயனை அனுப்ப முடிந்தது. இது காங்கிரஸ் அரசு ஆரம்பித்த பணி என்ற கருத்த வலைதளங்களில் பரவுகிறது.
சந்திராயன் 1- ன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, சந்திராயன் 2- ன் திட்ட இயக்குனர் வனிதா முத்தையா, சந்திராயன் 3- ன் திட்ட இயக்குனர் முத்துவேல் ஆகிய மூன்று பேருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பெருமைப் பட்டுக் கொள்கிறது தமிழ் ஆர்வலர் தரப்பு.
இந்த மூன்று பேருமே தமிழ்நாடு அரசின் பாடத் திட்டத்தில் படித்தவர்கள். மாநில அரசின் பாடத் திட்டத்தில் படித்தால் உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும் என்பதற்கு இவர்கள் மூன்று பேரும் சிறந்த உதாரணம் என்று மார் தட்டிக்கொள்கிறது இன்னொரு தரப்பு.
சந்திராயன் 3 ஏவுவதற்கு முன்பு அதனை சோதித்தப் பார்ப்பதற்கு நிலவில் இருப்பது போன்ற மண் இஸ்ரோவுக்கு தேவைப்பட்டது. ‘அனாத்தோ சைட்’ என்ற இந்த அரிய வகை மண் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தின் சித்தம்பூண்டி, குன்னமலை ஆகிய கிராமங்களில் மட்டுமே உள்ளது. அங்கிருந்து 50 டன் மண் இ்ஸ்ரோவுக்கு அனுப்பப்பட்டது. எனவே சந்திராயன் நிலவில் வெற்றிகரமாக இறங்கியதில் தமிழ் மண்ணுக்கு பங்கு இருக்கிறது என்ற பெருமையான செய்தியும் வலைதளங்களில் வேகமாக பரவுகிறது.
இன்னொரு செய்தியும் கூட உலா வருகிறது. எப்படி மோடி தென் மாநிலங்களை கைப்பற்ற குறி வைக்கிறாரோ அதே போன்று சந்திரயானும் நிலவின் தென் பகுதி மீதுதான் குறியாக உள்ளது என்பது தான் அந்த செய்தி.
இன்னும் என்னென்ன செய்திகள் வரப்போகிறதோ !
000