ஏப்ரல் 15
சீனாவில் அலுவலகம் நடத்திய லக்கி டிரா போட்டியில் பங்கேற்று, சம்பளத்துடன் கூடிய 365 நாள் விடுமுறை என்ற பரிசை ஒருவர் தட்டி சென்று உள்ளார். ஷென்ஜென், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் ஷென்ஜென் நகரில் உள்ள பெயர் வெளியிடாத நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களுக்கு இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தது. கொரோனா பெருந்தொற்று பரவலை அடுத்து, 3 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகி இருந்தது.
அதனுடன், லக்கி டிரா முறையில் போட்டி ஒன்று நடத்தவும் முடிவானது. கொரோனா பாதிப்பில் இருந்து வந்துள்ள ஊழியர்களுக்கு பணி அழுத்தத்தில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கவும், அவர்களை வேலை செய்ய ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த போட்டிக்கு முடிவு செய்யப்பட்டு இருந்தது.
அதிர்ஷ்டசாலிகளுக்கு இந்த போட்டி கைகொடுக்கும். அவற்றில் ஒன்று, ஒரு நாள் அல்லது 2 நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும் உள்ளிட்ட பரிசுகள் இருந்தன.
அதிர்ஷ்டம் இல்லையென்றால் அபராதமும் கிடைக்கும். நீங்கள் உணவு சப்ளை செய்யும் வெயிட்டர் வேலை செய்பவராக இருக்க வேண்டும் என்ற சூழலும் காணப்பட்டது. எனினும், பலர் தைரியத்துடன் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
ஆனால், இதில் அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு எதிர்பார்த்ததற்கும் மேலாக கிடைத்த பரிசு அந்நாட்டில் உள்ள மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அந்த நபருக்கு சம்பளமும் கொடுத்து, 365 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படும் என்ற வகையில் லக்கி டிராவில் பரிசு ஒன்றை அவர் தட்டி சென்று உள்ளார். இந்த மெகா பரிசை பெற்ற விவரம் வீடியோவாக சீன சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலானது. அதில், தனக்கு கிடைத்த இந்த பரிசு உண்மையா? என பரிசு பெற்ற நபர் தொடர்ச்சியாக கேட்டு, தெளிவுப்படுத்தி கொள்கிறார். அவராலேயே இதனை நம்ப முடியவில்லை. இந்த பரிசு அறிவிக்கப்பட்டதும் நிறுவன முதலாளி திகைத்து போய் உள்ளார். இதுபற்றி அந்நிறுவனத்தின் நிர்வாக அளவிலான பெண் பணியாளரான சென் கூறும்போது, போட்டியில் பரிசு பெற்ற நபருடன் நாங்கள் ஆலோசனை நடத்த இருக்கிறோம். நீங்கள் பரிசுக்கு பணம் பெற்று கொள்ள விரும்புகிறீர்களா? அல்லது சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அனுபவிக்க போகிறீர்களா? என்பது பற்றி அவரிடம் கேட்க இருக்கிறோம் என கூறியுள்ளார். இந்த விவரம் அறிந்த சமூக ஊடக பயனாளர்கள் பலரும் நிறைய விசயங்களை பகிர்ந்து உள்ளனர். ஒரு சிலர் அந்த நிறுவனத்தில் காலி பணியிடம் எதுவும் இருக்கிறதா? என விருப்பம் தெரிவித்து உள்ளனர். சிலர், பரிசு கிடைத்த பின் நடக்கும் நடைமுறையை பற்றி விவரித்து உள்ளனர். அதில், டிக்டாக்கை போன்ற மற்றொரு செயலியான டாயின் என்ற சமூக ஊடகத்தில் ஒருவர், இந்த பரிசு தொகையை பெற அவருக்கு தைரியம் இருக்கா என்ன…? ஒரு வருடம் கழித்து, விடுமுறையை முடித்து, அலுவலகத்திற்கு அவர் திரும்பும்போது, அந்த இடத்தில் அவருக்கு பதிலாக வேறொருவர் வேலை செய்து கொண்டு இருப்பார் என இப்பவே மிரட்டலாக தெரிவித்து இருக்கிறார்.