ஜுலை, 3 – தேசிய வாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்த நிலையில் அதன் தலைவரும் நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான சரத்பவாரை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,மல்லிகார்ஜுன் கா்கே, ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
மராட்டிய மாநிலத்தில் நேற்று ( ஞாயிற்றுக் கிழமை) நிகழ்ந்தஅதிரடி அரசியல் மாற்றம் நாடு முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது. எதிர்க்கட்சி தலைவரே ஆளும் பா.ஜ. வில் இணைந்து துணை முதலமைச்சர் பதவியை பெற்றதுதான் பரபரப்புக்கு காரணமாகும்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத் பவார் இரண்டு வாரங்களுக்கு முன்பு தமது கட்சியின் செயல் தலைவர்களாக சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலை அறிவித்தார். இவர்களில் சுப்ரியா சுலே, சரத் பவாரின் மகள் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினரும் கூட.
அப்போது சரத் பவார், தன் அண்ணன் மகனும் கட்சியின் 2- வது தலைவராகவும் விளங்கிய அஜித் பவாருக்கு எந்த பதவியும் வழங்கவில்லை. இதனால் அஜித்பவார் அதிருப்தியில் இருந்து வந்தார். இருப்பினும் அவர் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் என்ற முறையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடித்தார்.
அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சுமார் 30 பேருடன் ஆளும் பாஜக கூட்டணியில் இணைவதாக ஞாயிற்றுக் கிழமை காலையில் அறிவித்தார். மேலும் அவர் தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கொண்டு ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநரை சந்தித்தார்.
இதையடுத்து அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதாக ஆளும் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் பாரதீய ஜனதா அறிவித்தன. உடனே பதவி ஏற்பு விழா நடைபெற்றது. ஆளுநர் ரமேஷ் பைஸ், அஜித் பவாருக்கு துணை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில், மொத்தம் 53 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில் அஜித் பவாருக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமது தலைமையில் இருப்பதுான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்றும் இனி தேசிய வாத காங்கிரஸ் என்ற பெயரிலேயே தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அஜித்பவார் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சரத்பவார் “தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இது ஒன்றும் புதிதல்ல. நடப்பதை மராட்டிய மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவு எப்போதும் எங்கள் பக்கந்தான்” என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் சரத்பவாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சோனியா, ராகுல்,கார்கே ஆகியோர் தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளனர்.
இதனால் யாருடைய தலைமையில் இருப்பது உண்மையான தேசிய வாத காங்கிரஸ் கட்சி என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இனி இந்த பிரச்சி நீதிமன்றம்,தேர்தல் ஆணையம் போன்றவற்றுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை திரட்டி ஒரே அணியில் போட்டியிடச் செய்வதற்கான ஏற்பாடுகளை கடந்த சில மாதங்களாக சரத்பவார் தீவிரமாக செய்து வருகிறார். இதனால் கோபம் அடைந்த பாரதீய ஜனதா தலைமை சரத் பவார் கட்சியை உடைத்து அவருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
குடும்ப அரசியல்.
மராட்டிய மாநிலத்தில் ஓராண்டுக்கு முன்பு உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனாவின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. உத்தவ் தமது மகன் ஆதித்ய தாக்ரேவை கட்சியில் முன்னிலைப் படுத்தினார். இதனால் வெறுப்படைந்த ஏக்நாத் ஷிண்டே என்பவர் சிவசேனா கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தன் பக்கம் திரட்டி கட்சியை உடைத்தார். இதனால் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு கவிழ்ந்தது. பிறகு ஷி்ண்டே பாரதீய ஜனதா ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்து நடத்தி வருகிறார். மகனை முன்னிலைப் படுத்தியதால் சரிவை சந்தித்தார் உத்தவ் தாக்ரே. இப்போது சிவசேனா கட்சியே ஷிண்டேவுக்கு என்று ஆகிவிட்டது.
அதே போன்று சரத்பவார் மகளை முன்னிலைப் படுத்தியதால் இழப்பை சந்தித்து இருக்கிறர்.
000