நிதிப் பரிமாற்ற கணக்கு அறிக்கைகளை முறையாக காட்டாதது தொடர்பாக பத்தாயிரம் வழக்குகள் தமிழ்நாட்டில் பதியப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.இந்த வகை வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இரு மடங்கு கூடி இருப்பதாகவும் வருமானவரித்துறை கூறியுள்ளது.
முறையாக கணக்கு காட்டாத வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
பொதுமக்கள் தொடர்புடைய முதலீட்டில் ஈடுபட்டுள்ள கூட்டுறவு வங்கிகள், வணிக வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்டவைகள் வருமானவரித்துறைக்கு எஸ்.எப்.டி.எனப்படும் நிதி பரிவர்த்தனை அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்யவேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி சோதனை நடத்துவதற்கான அதிகாரம் வருமான வரித்துறைக்கு உள்ளது.
இதையடுத்து நிதி கணக்கு அறிக்கைகளை ஆய்வு செய்ததில் பத்தாயிரம் வழக்குகள் குவிந்துள்ளதாக வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் 10 லட்ச ரூபாய் முதலீடுகளுக்கு மேலாக செல்லும்போதும் ,சார் பதிவாளர் அலுவலகங்களில் 30 லட்சம் ரூபாய்க்கு மேலாக பரிவர்த்தனை நிகழும் போதும் உரிய கணக்கை நிதி பரிவர்த்தனை அறிக்கையில் காட்டப்பட வேண்டும். இவற்றில் முதலீடு செய்த பொது மக்கள் தாக்கல் செய்யும் கணக்குகள் வருமானவரித் துறை அறிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது ஒன்றாக இருக்க வேண்டும். முரண்பாடு ஏற்பட்டால் அது குறித்து உரிய விளக்கம் அளிக்கக் கோரி வங்கி போன்ற அமைப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது
அறந்தாங்கியில் உள்ள கூட்டுறவு வங்கி இந்த அறிக்கையை முறையாக தாக்கல் செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த வங்கியில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
000