டிசம்பர்-28.
‘இளையதளபதி’விஜய்க்கு தொடர்ச்சியாக 3 மெகாஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லீ. பாலிவுட்டுக்கும் ஒரு நடை போனார்.ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கிய ஜவான் பெரும் வெற்றி பெற்றது. இந்தியில் படம் தயாரிக்கும் ஆசை வந்தது.
தமிழில் வசூல் குவித்த தனது ‘தெறி’ படத்தை ‘பேபி ஜான்’ எனும் பெயரில் ரீ-மேக் செய்தார். அவர் இயக்கவில்லை. காளீஸ் என்பவர் டைரக்டு செய்தார்.
வருண் தவான், கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சல்மான் கான் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியான இந்தப்படம் நல்ல விமர்சனத்தையும் பெறவில்லை. வசூல் நிலவரமும், கலவரமாகவே உள்ளது.
இதற்கு காரணம் –புஷ்பா -2.
தெலுங்கில் உருவான ‘புஷ்பா 2’, இந்தியில் ‘டப்’ செய்யப்பட்டது.யாருமே எதிர்பாராத வெற்றி.
இந்தி ஏரியாவில் அந்த படம் முதல் நாளில்,72 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஜவான் முதல் நாள் வசூல் 65 கோடிதான்.
அட்லீ தயாரித்த பேபிஜான் – முதல் நாளில் ரூ.11.25 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. இது மூன்றாவது வாரத்தில் இருக்கும் ‘புஷ்பா 2’ படத்தின் ஒருநாள் வசூலை விட குறைவு.
இதனால் அட்லீ சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
வார இறுதி நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது பேபி ஜான் படக்குழு.
*