ஆகஸ்டு,09-
தமிழில் வெற்றிப்படங்களை கொடுக்கும் இயக்குநர்களின் அடுத்த இலக்கு , இந்தி சினிமாவிலும் வாகை சூடுவது. இவர்களில் சிலர் ஜெயித்தார்கள். பலர் தோற்றார்கள்.
விஜய்க்கு தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் தந்த அட்லி, ஷாருக்கான் நடிப்பில் ஜவான் இந்திப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இவரை அடுத்து தமிழில் இருந்து இன்னொரு டைரக்டரும் இந்திக்கு சென்றுள்ளார்.
அவர், விஷ்ணு வர்தன்.
2002 ஆம் ஆண்டு வெளிவந்த ‘குறும்பு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன்.
அடுத்து அவர் இயக்கிய ‘அறிந்தும் அறியாமலும்’ படம் அவரை கவனிக்க வைத்தது. அஜித் நடித்த ‘பில்லா’ படத்தை இயக்கியதன் மூலம் பிரபல இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார்.
அவர் ஏற்கனவே ஹிந்தியில் ‘ஷெர்ஷா’ என்ற படத்தை இயக்கினார். கொரோனோ தாக்கம் காரணமாக இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகவில்லை.ஓடிடி தளத்தில்தான் வெளியானது. . தனது முதல் பாலிவுட் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாத வருத்தம் விஷ்ணுவுக்கு உண்டு.
மீண்டும் அஜித் நடிக்கும் தமிழ்ப் படம் ஒன்றை விஷ்ணுவர்தன் இயக்கப் போவதாக செய்திகள் வந்தன. ஆனால் அந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் விஷ்ணு வர்தன் , மீண்டும் ஹிந்தி படம் ஒன்றை இயக்கபோவதாக தகவல் வெளியாகி உள்ளது. கரண் ஜோஹர் தயாரிக்கும் இந்த படத்தில், சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கிறார். விரைவிலேயே ஷுட்டிங் ஆரம்பம் ஆக உள்ளது. அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
000