ஏப்ரல்.22
சமந்தா நடிப்பில் அண்மையில் வெளியாக சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்ட சாகுந்தலம் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படத்தின் முதல் வார வசூல் பத்தில் ஒரு பகுதியாக மட்டுமே இருந்ததால் நடிகை சமந்தா சோகத்தில் மூழ்கியுள்ளார்
நடிகை சமந்தாவின் நடிப்பில் யசோதா திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, பெரும் பொருட்செலவில் காளிதாசர் இயற்றிய சாகுந்தலம் கதை அடிப்படையாகக் கொண்டு பான் இந்தியா திரைப்படமாக ‘சாகுந்தலம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது. சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்ட 3டி படமாக உருவான இந்த சாகுந்தலத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார்.
குணசேகர் இயக்கிய இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ளார். தமிழ்,தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் கடந்த 14ம் தேதி இந்த சாகுந்தலம் படம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்ட சாகுந்தலம் படம், இயக்குநர் குணசேகரன் மற்றும் நடிகர் சமந்தா ஆகியோருக்கு தோல்வியையே பரிசாகக் கொடுத்துள்ளது.
மூன்று மொழிகளிலும் வெளியான இந்த படத்தின் முதல் வார வசூல் ரூ.8 கோடியை மட்டுமே தொட்டுள்ளது. ரசிகர்களின் வருகை குறைவால், படத்தை தியேட்டரிலிருந்து நீக்கும் நிலையும் உருவாகியுள்ளது. யசோதா படத்தின் தோல்வியைத் தொடர்ந்து, சாகுந்தலமும் இப்போது, வசூலில் சரிவை சந்தித்துள்ளதால் நடிகை சமந்தா சோகத்தில் ஆழ்ந்துள்ளார். தொடர் தோல்விகளால், திரைப்படத்துறையில் தனக்கான இடம் பின்னோக்கிச் செல்லும் என்ற அச்சத்திலும் அவர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.