டிசம்பர்-27.
திமுக அரசை கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டுப் போராட்டம் நடத்தியது பொதுமக்கள் கவனத்தை ஈர்த்து உள்ள போதிலும் கடுமையான விமர்சனங்களுக்கும் ஆளாகி உள்ளது.
கோவையில் உள்ள இல்லத்தின் முன்பு தனக்கு தானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்டார். இதற்கான சாட்டை கோயில் ஒன்றில் இருந்து கொண்டு வரப்பட்டு இருந்தது. அவர் சாட்டையால் அடித்துக் கொள்வதைப் பார்ப்பதற்காக வீட்டு முன்பு பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு இருந்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டதும் அந்த வழக்குத் தொடர்பான முதல் தகவல் அறிக்கை மாணவி பற்றிய விபரங்களுடன் சமூக வலைதளங்களில் கசிந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அரசுக்கு கண்டனத்தை தெரிவிப்பதற்கு அண்ணாமலை இந்த வினோதப் போராட்டத்தை நடத்தினார்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை திமுகவை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை செருப்பு அணியப் போவதில்லை என்ற சபதத்தையும் எடுத்தார்.
இது பற்றி காங்கிரஸ் மூத்தத் தலைவர் திருநாவுக்கரசர் “அண்ணாமலை அரசியல் படிப்பதற்காக லண்டன் சென்றார் என்று கேள்விப்பட்டேன். இப்போதுதான் தெரிகிறது அண்ணாமலை ‘சர்க்கஸ்’ படிக்க லண்டன் சென்று வந்துள்ளார் ” என்று விமர்சனம் செய்து உள்ளார். .
“சர்க்கஸில் தான் கோமாளிகள் சாட்டையால் அடித்துக் கொண்டு மக்களை மகிழ்விப்பார்கள். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், ஊர்வலம் என அரசியல் போராட்டங்களுக்கு எவ்வளவோ வடிவங்கள் உள்ளன. ஆனால், அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் சர்க்கஸ் கோமாளிபோல் ஆகிவிட்டது” என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
” அவரைக் கிண்டல், கேலியாக மக்கள் பார்க்கின்றனர். நேற்று தொலைக்காட்சிக்கு முன் இரண்டு செருப்பையும் அரைமணிநேரம் எடுத்துக் காட்டி கொண்டிருக்கின்றார். மக்களுக்கு செருப்பு அணிய மாட்டேன் என்று சொன்னால் புரியாதா?. ஐபிஎஸ் படித்த மனிதர் தரமான அரசியலை முன்னெடுக்க வேண்டும். கோமாளி அரசியலை முன்னெடுக்க கூடாது.” என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ” சாட்டையால் அடித்துக் கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல் கேலிக் கூத்தாக உள்ளது. அவருடைய போராட்டத்தை பகுத்தறிவாளர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அண்ணாமலையின் போராட்டதைப் பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள் ” என்று விமர்சனம் செய்து இருக்கின்றார்.
கடுமையான விமர்சனங்கள் இருந்த போதிலும் அண்ணாலையின் சாட்டை அடிப் போராட்டம் பொது மக்கள் கவனத்தை ஈர்த்து உள்ளது என்பது உண்மை.
*