June 08, 23
ஈரோடு கூடுதல் ஆட்சியரான மணீஸ் நரவனே தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு ககன்தீப் சிங் பேடி மீது புகார் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து ” எனது மனசாட்சியின் முடிவை பகிரங்கப்படுத்துகிறேன். இதனால் இதுபோன்ற எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும்” என பதிவிட்ட நிலையில் அந்த பதிவை அவர் அழித்துவிட்டார்.
மணீஸ் நரவனே தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் “ சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக இருந்த என்னை, பட்டியலினத்தை சார்ந்தவன் என்பதால் ககன்தீப் சிங் பேடி துன்புறுத்தினார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூட்டத்தில் வேண்டுமென்றே என்னை திட்டி அவமானப்படுத்தினார். இதனால உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு மன உளைச்சலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றேன்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் பிரச்சினையை உருவாக்க ககன்தீப் சிங் பேடி முயற்சி செய்தார். அதேபோல கோப்புகளில் வேண்டுமென்றே கையெழுத்திடாமல் இரவு வரை காத்திருக்க செய்தார் ” என குறிப்பிட்டுள்ளார்.
மணீஷ் நரவானேயின் குற்றச்சாட்டுக்கு, தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு ககன்தீப் சிங் பேடி பதிலளித்துள்ளார்.
“ மணீஷ் மிகவும் நல்ல அதிகாரி, சுறுசுறுப்பாக செயல்படக் கூடியவர். அவர் அனுப்பிய கடிதத்தை படித்தேன். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 2 மாதத்திற்கு முன்பு கூட என்னிடம் இயல்பாக பேசினார். கோவிட் சமயத்தில் எனக்கு கீழே இருந்த அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தனித்தனியே வேலையை பிரித்துக் கொடுத்தேன்.
அனைவரும் இணைந்து மக்களுக்காக பணியாற்றினோம். எந்த ஒரு முன்னோக்கத்தோடும் நான் இதுவரை யாரையும் நடத்தியதில்லை. என்னுடைய பணி அனுபவத்தில் இதுபோன்ற புகார்கள் யாரும் என் மீது கொடுத்ததில்லை. எனக்கு ஆச்சரியமாக உள்ளது “ என சுகாதரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.