புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவின் ஒரு பகுதியாக அதன் வளாகத்தில் இன்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் தமிழகத்தில் இருந்து சென்ற 21 ஆதினங்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அங்கு செங்கோல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. அதன் மீது ஆதினங்கள் புனித நீர் தெளித்து வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து, அதனை கையில் எடுப்பதற்கு முன்பாக, பிரதமர் மோடி சாஷ்டாங்கமாக கீழே விழுந்து வணங்கினார். தொடர்ந்து, ஆதினங்களின் புடைசூழ கையில் செங்கோலை ஏந்தி பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் சென்றார். அப்போது, தேவாரம் பாடல்கள் பாடப்பட்டன. பின்பு, மக்களவையில் உள்ள சபாநாயகரின் இருக்கைக்கு அருகே செங்கோல் வைக்கப்பட்டது. பின்பு, அனைத்து ஆதினங்களிடமும் பிரதமர் மோடி ஆசி பெற்றார். அப்போது வந்தே மாதரம் மாதரம் பாடலை, நாதஸ்வரம் மூலம் வாசித்து அசத்திய கலைஞர்களை பிரதமர் மோடி வாழ்த்தினார்.
தொடர்ந்து மதநல்லிணக்கத்தை உணர்த்தும் விதமாக இந்து, கிறிஸ்துவம், இஸ்லாமியம், ஜெயின் மற்றும் பவுத்த மதம் உள்ளிட்ட 12 மதங்களை சேர்ந்த குருமார்களின் வழிபாடும் நடத்தப்பட்டது. இதனிடையே, புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களை பிரதமர் மோடி கவுரவித்தார். அவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைப்புபரிசுகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இதையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
புதிய நாடாளுமன்ற கட்டடம் 1200 கோடி ரூபாய் செலவில், 18 ஏக்கர் அளவுக்கு அதாவது 64,500 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தன்னம்பிக்கையின் அடையாளமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கலைப் படைப்புகள், தொலைநோக்கு பார்வை மற்றும் இந்திய கட்டடக்கலை திறன் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டடம், இரண்டு ஆண்டுகள் 5 மாதம் 18 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.