சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த 41 வயதான ஆண் ஒருவருக்கு அங்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு பரவலாக அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் ,மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கோவையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதையடுத்து, கோவை பன்னாட்டு விமான நிலையத்தில் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வருபவர்கள் மற்றும் ரேண்டமாக 2 சதவீதம் பயணிகளிடம் சளி மாதிரிகள் சேகரித்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, அனைத்து பயணிகளுக்கும் ஆட்டோமெட்டிக் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கோவை வந்த பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கோவை கணபதியை சேர்ந்த 41 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை வீட்டில் தனிமைப் படுத்திக்கொள்ள அறிவுறுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், அவருக்கு என்ன வகையான கொரோனா தொற்று பாதித்துள்ளது என்பதை கண்டறியும், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.