சிங்கப்பூரில் 1 கிலோ போதைப்பொருளை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இந்திய வம்சாவளி நபரான தங்கராஜு சுப்பையா பல்வேறு சட்டப்போராட்டங்களை தாண்டி இன்று அதிகாலை தூக்கிலிடப்பட்டார். அவர் இறப்பதற்கு முன்பு அவர் ஆசையாக கேட்டு சாப்பிட்ட உணவு வகைகள், தூக்கு மேடைக்கு கொண்டு செல்லப்படும் போது அவர் பேசியது உள்ளிட்டவை குறித்து இங்கு காண்போம்.
சிங்கப்பூரை சேர்ந்தவர் தங்கராஜு சுப்பையா (46). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயே சொந்தமாக தொழில் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு 1 கிலோ கஞ்சாவை கடத்தியதாக தங்கராஜு சுப்பையாவை சிங்கப்பூர் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு அவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சிங்கப்பூரில் 500 கிராம் போதைப்பொருளை வைத்திருந்தாலே மரண தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தங்கராஜுவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே, தான் நிரபராதி என்றும், தனக்கும் கஞ்சா கடத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தங்கராஜு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அவரது வாதங்களுக்கு முறையான சாட்சியங்கள் ஏதும் இல்லாததால் அவை நிராகரிக்கப்பட்டன.
இதேபோல, ஐரோப்பிய யூனியன் நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் தங்கராஜு சுப்பையாவின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தி வந்தன. ஆனால், அவர்களின் கோரிக்கையையும் சிங்கப்பூர் அரசு நிராகரித்துவிட்டது. இந்நிலையில், இன்று காலை 6 மணிக்கு அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தூக்கு தண்டனைக்கு முன்பு அவர் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகள், என்னென்ன செய்தார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் சிறைச்சாலைகளை பொறுத்தவரை, தூக்கு தண்டனை கைதிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் 7 நாட்களுக்கு முன்பாகவே நோட்டீஸ் வழங்கப்பட்டு விடும். அந்த வகையில், தங்கராஜுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும், தங்கராஜ் இயல்பாகவே இருந்திருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது பழைய குடும்ப ஃபோட்டோ ஆல்பத்தை அவரது உறவினர்கள் கொடுத்துள்ளனர். அதை தினமும் பல மணிநேரம் பார்த்தபடியே இருந்திருக்கிறார் தங்கராஜ். அதில் தனது தாய், தந்தையின் புகைப்படங்களை பார்த்து கண் கலங்கியுள்ளார். மேலும், தான் தூங்கும் போதும் அந்த ஃபோட்டோ ஆல்பத்தை கையில் பிடித்தபடியே தூங்கியுள்ளார். அந்தக் காலக்கட்டத்துக்கு சென்றுவிட்டால் நன்றாக இருக்கும் என சிறைக்காவலர்களிடம் அவர் கூறுவாராம்.
இந்நிலையில், மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய நாள் (நேற்று), சிறைக்காவலர்கள் அவரிடம் கடைசி ஆசையை கேட்டுள்ளனர். அப்போது தங்கராஜு, தான் சிறு வயதில் இருக்கும் போது தனது தந்தை தனக்கு ஆசையாக வாங்கி தரும் சிக்கன் ரைஸ், நாசி பிரியாணி, ஐஸ்கிரீம் சோடா மற்றும் சில பால் ஸ்வீட்டுகளை விரும்பி கேட்டுள்ளார்.
இதையடுத்து, அவர் கேட்ட உணவுகளை அவரது உறவினர்கள் மூலம் சிறை நிர்வாகம் வாங்கிக் கொடுத்தது. ஆனால், அவர் கேட்ட பால் ஸ்வீட் மட்டும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த உணவுகளை ஆசை தீர சாப்பிட்டுள்ளார் தங்கராஜ். சாப்பிட்டு முடித்துவிட்டு ஐஸ்கீரம் சோடாவை குடித்து உறங்க சென்றார் தங்கராஜ். ஆனால், அடுத்த நாள் தூக்கிலடப்படும் தேதி என்பதால் தங்கராஜ் சரியாக தூங்கவில்லை.
இந்நிலையில், அதிகாலை 3 மணிக்கு சிறைக்காவலர்கள் தங்கராஜை எழுப்பியுள்ளனர். பின்னர் தங்கராஜ் வெந்நீரில் குளித்துள்ளார். அதன் பிறகு புதிய ஆடைகள் அவருக்கு அணிய கொடுக்கப்பட்டது. அப்போது அவர் தனது குடும்ப ஃபோட்டோ ஆல்பமை கையில் வைத்திருந்தார். பின்னர் காவலர்கள் கறியதன் பேரில் அந்த ஆல்பத்தை அவர் ஒப்படைத்துவிட்டார். நேரம் நெருங்க நெருங்க அவரது முகத்தில் ஒருவிதமான பதற்றம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரது முகத்தில் முகமூடி அணியப்பட்டு சரியாக 6 மணிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.