மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. 12 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளதால் மதுரை மாநகரமே கோலகலம் பூண்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகவும் பிரபலம்.
இன்று சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை சிறப்பு பூஜையைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி ஆகியோர் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அதன் பின்னர் 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. 12 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.
வருகிற 30ஆம் தேதி பட்டாபிஷேகமும், மே 1ஆம் தேதி திக் விஜயமும் நடக்க உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 2 ஆம்தேதியும் மே 3ஆம் தேதி தேரோட்டமும் நடக்க உள்ளது.
மே 4ஆம் தேதி தீர்த்தவாரியுடன் சித்திரைத் திருவிழா நிறைவுபெறுகிறது. இந்த சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்வில் தமிழ்நாடு நிதியமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி பொன் வசந்த் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்னர்.