செப்டம்பர்,15-
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம் மிகவும் வலிமையானது. தயாரிப்பாளர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் நடிகர்களை, திரை உலகத்தில் இருந்தே அவர்களால் விரட்ட முடியும்.
இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தின் ஹீரோ வடிவேலு, அந்த படத்தில் நடித்த போது தயாரிப்பாளர் ஷங்கருக்கும், இயக்குநர் சிம்புதேவனுக்கும் ஏகப்பட்ட இம்சைகளை கொடுத்தார்.படப்பிடிப்புக்கு வராமல் முரண்டு செய்தார்.இதனால் ஷங்கர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார்.
வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’கார்டு போட்டு அவரை நடிக்க விடாமல் செய்தது.ஐந்தாறு ஆண்டுகள் வடிவேலு வீட்டிலேயே முடங்கி கிடக்க நேரிட்டது. தயாரிப்பாளர் ஷங்கருக்கு 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுத்ததால் மீண்டும் அரிதாரம் பூச அனுமதிக்கப்பட்டார், வடிவேலு.
இப்போது சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய நான்கு நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ’ரெட் கார்டு’ போட்டுள்ளது. இதனால் அவர்கள் நான்கு பேரும் சினிமாவில் நடிக்க முடியாது.வடிவேலு மாதிரி நஷ்டஈடு அளித்தோ அல்லது வேறு ரூபத்திலோ நிவாரணம் தேடிகொண்டால் மீண்டும் நடிக்கலாம்.
சிம்புவை கதாநாயகனாக வைத்து ’அன்பானவன்.அசராதவன் அடங்காதவன்’என்ற படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். படம் ஓடவில்லை.இதனால் ராயப்பனுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுக்க சிம்பு ஒப்புக்கொண்டிருந்தார்,ஆனால் நடிக்க வில்லை. எனவே சிம்பு மீது ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சிம்புவுக்கு ’ரெட்கார்டு’போட்டு, சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது சங்க பணத்தை முறையாக வரவு, செலவு வைக்க வில்லை.இதனால் அவருக்கு ‘ரெட் கார்டு; வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷ், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரிக்கும் படத்தில் நடித்து வந்தார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார். இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் முரளி புகார் அளித்ததால், தனுஷுக்கு ரெட் கார்டு. தயாரிப்பாளர் மதியழகன், நடிகர் அதர்வா மீது புகார் அளித்திருந்தார்.அதற்கு முறையாக பதிலளிக்காமல் நழுவி வந்ததால் அதர்வாவுக்கு ரெட்கார்டு கொடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்தது.
’ரெட் கார்டு’ வழங்கப்பட்டுள்ள நான்கு பேருமே வாரிசு நடிகர்கள் என்பது ருசியான தகவல். நடிகர் முரளியின் மகன்,அதர்வா. விஷாலின் தந்தை தயாரிப்பாளராக உள்ளார். சிம்பு, டி.ராஜேந்தரின் பிள்ளை என்பதும், இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ் என்பதும் உலகுக்கே தெரியும்.
அப்பாக்கள் கொடுத்த தைரியத்தில் தான் , வம்பு வளத்தீங்களா?
000