‘சினிமாவுக்கு சீக்கிரம் ‘குட் பை’ சொல்லப்போவதாக டைரக்டர் மிஷ்கின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இயக்குநராக இரண்டு, மூன்று வெற்றிப்படங்களை கொடுத்த மிஷ்கின், இப்போது கிட்டத்தட்ட முழுநேர நடிகராகி விட்டார். மிஷ்கின் நடித்த சினிமாக்களின் முன்னோட்ட நிகழ்ச்சிகளில் மேடை ஏறுவதற்கு அவருக்கு வாய்ப்பு வரும்.
அப்போது சர்ச்சையாக கருத்துக்கூறி, வாங்கி கட்டி கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார், இந்த ‘படித்த மேதை’
இயக்குநர் பாலாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின்,’ பாலா ஒரு குடிகாரன்’ என ‘வாழ்த்தி’ பேசினார்.
அண்மையில் ‘பாட்டல் ராதா’ என்ற படத்தின் ‘டிரெய்லர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மிஷ்கின், இளையராஜாவை, அவன் ..இவன்’ என விமர்சித்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பல தரப்பினரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இதனால் அவர், விரக்தியின் விளிம்பில் நின்று விசும்பி கொண்டிருப்பதாக கோடம்பாக்கத்தில் செய்தி உலா வரும் ,வேளையில் அது, உண்மையே என நினைக்க தோன்றும் வகையில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் மிஷ்கினுக்கும் ஒரு கேரக்டர் உண்டு.
படத்தின், இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் மிஷ்கின் கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக ’டிராகன்’ படத்தில் பங்களிப்பு செய்துள்ள ஒவ்வொருவரின் போட்டோக்களை காட்டி , அவரது எண்ணத்தை ஒரு வரியில் சொல்லுமாறு தொகுப்பாளர் கேட்டார்.
மிஷ்கின் போட்டோ வந்தது. அவரிடமும், ஒரு வரியில் கருத்து கேட்டனர். கொஞ்சம் யோசித்த மிஷ்கின், “விரைவில் சினிமாவை விட்டு விலகப் போகும் ஒருவன்” என்று ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு நகர்ந்தார், மிஷ்கின்.
இது, சினிமா ஸ்டண்டா ? நிஜமா ? என தெரியவில்லை.