செப்படம்பர், 02-
இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ச்சியாக திரைப்படங்கள் எடுத்த, பெரிய நிறுவனங்கள் இப்போது சினிமாக்கள் தயாரிப்பதில்லை.ஏவிஎம், விஜயா- வாகினி,சத்யா மூவீஸ்,சிவாஜி பிலிம்ஸ்,சூப்பர் குட் பிலிம்ஸ், பஞ்சு அருணாசலத்தில் பி.ஏ.ஆர்ட்ஸ், இளையராஜாவின் பாவலர் கிரியேஷன்ஸ் போன்ற நிறுவனங்கள் படம் எடுக்கும் ஆசையை மறந்தே போனார்கள்.
உச்ச நடிகர்கள் சம்பளம் 100 கோடி ரூபாயை தாண்டி விட்டது. அவர்கள் வாங்கும் ஊதியத்தில் பாதியை பிரமாண்ட இயக்குநர்கள் கேட்கிறார்கள். பல கோடிகளை கிராபிக்சுக்கு கொட்ட வேண்டும். எனவே சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டது போல், தயாரிப்பு நிறுவனங்களும் கதவை அடைத்து விட்டன.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே சினிமா தயாரிக்க முடியும் என்ற நிலை உருவாகி விட்டது .கார்ப்பரேட் அல்லாத சில தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து படம் தயாரிக்கும் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது.அதற்கான முன்னெடுப்பாக முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்சும், இன்வேனியோ பிலிம்சும் நிறுவனமும் இணைந்துள்ளன.
இந்த நிறுவனங்கள், நான்கு சினிமாக்களை ஒருங்கிணைந்து தயாரிக்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படங்கள் உருவாகிறது.ஒரு படம்- கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் கண்ணிவெடி; இது தமிழ் படம். இன்னொன்று- ராஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் ரெயின்போ.இது தெலுங்கு படம். மேலும் இரண்டு பெயரிடப்படாத திரைப்படங்கள் குறித்தஅறிவிப்பு விரைவில் வெளியாகும் .
’’ தொழில்நுட்ப திறன் மற்றும் உயர்தர பொழுதுபோக்கை வழங்குவதற்காக எங்கள் இரண்டு நிறுவனங்களும் இணைந்துள்ளன.இந்த புதிய பயணம் உற்சாகத்தைத் தருகிறது. இரண்டு நிறுவனங்களின் தனித்துவ சிறப்புகளும் எங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கும். எல்லைகள் தாண்டி அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் நாங்கள் சொல்லப்போகும் கதைகள் வெள்ளித் திரையை உயிர்ப்பிக்கும் என்று இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
000