தமிழ் சினிமா உலகத்தில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றான ‘சின்னத்தம்பி’ வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்டதை நடிகை குஷ்பு நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில், “தமிழ் சினிமாவில் புயலைக் கிளப்பிய சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆகிவிட்டதை தன்னால் நம்பமுடியவில்லை.என் இதயம் இயக்குநர் பி.வாசுவுக்கும் மற்றும் நடிகர் பிரபுவுக்கும் துடிக்கும். ஆன்மாவைத் தொடும் பாடல்களைத் தந்த இளையராஜாவுக்காக என்றென்றும் கடைமைப்பட்டு இருப்பேன். நந்தினி ஒவ்வொருவரது இதயத்திலும் மனதிலும் என்றும் நிலைத்திருப்பார். அனைவருக்கும் நன்றி”என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி வெளியான சின்னத்தம்பி தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய அளவில வசூலை குவித்தப் படமாகும். இந்தப் படத்தில் இளையராஜா இசையில் இடம் பெற்றிருந்த “போவோமா ஊர்க்கோலம்”, “தூளியிலே ஆட வந்த”, “நீ எங்கே என் அன்பே”ஆகிய பாடல்கள் பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது.தமிழில் பெரிய வெற்றியைப் பெற்ற சின்னத்தம்பி பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகை குஷ்பு செவ்வாயன்று வீடு திரும்பினார். அவரை பலரும் சந்தித்து நலன் விசாரித்து வருகின்றனர்.