(ஏற்கனவே வெளியான செய்தி)
ஆகஸ்டு,2-
அபின்,கஞ்சா வரிசையில் இப்போது ஸ்மார்ட் போன்களும் புதியதொரு போதைப்பொருளாகி விட்டது.
சிறார்களும் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகி,சதா சர்வ நேரமும் அதிலேயே கிறங்கிக்கிடக்கிறார்கள். சிறார்கள் என இங்கே குறிப்பிடுவது,பள்ளிக்குழந்தைகளை மட்டுமல்ல,ப்ரிகேஜியில் சேர்வதற்கான வயது கூட முதிராத, பிஞ்சு குழந்தகளையும் சேர்த்துத்தான்.
விழித்து எழுந்ததும், பால் பாட்டில் கூட தேவை இல்லை- கேம்ஸ் விளையாட ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் எனும் நிலைக்கு , ஸ்மார்ட் போன்கள், மழலைகளை விழுங்கி விட்டது.
கொரோனா எனும் ஆக்டோபஸ், தனது விஷக்கரங்களால் உலகையே பிய்த்து,தின்று தீர்த்த சமயத்தில், கல்விக்கூடங்கள் மூடப்பட்டன. வீட்டில் இருந்தே கற்றுக்கொள்ளும் வகையில் , கையடக்க தொலைபேசியான ஸ்மார்ட் போன்கள் மாணவர்கள் கையில் கொடுக்கப்பட்டன. ஆசிரியர்கள்.மாணவர்கள் இடையேயான பாலமாக அவை இருந்ததை மறுக்க முடியாது.
கொரோனா ஓய்ந்து, கல்விச்சாலைகள் திறக்கப்பட்ட , நிலையிலும், ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டை மாணவர்கள் நிறுத்தவில்லை. அறிவுத்திறனை மேம்படுத்த, பெற்றோர்கள் வாங்கி கொடுத்த ஸ்மார்ட் போன்கள், இன்றைய தினம் மாணவர்கள் மூளையை மழுங்கடிக்கும் வஸ்துவாக மாறிப்போனது.
இதனால் கல்விக்கூடங்களில் ஸ்மார்ட் போன்கள், பயன்பாட்டினை தடைசெய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான யுனெஸ்கோ அறிவுறுத்தியுள்ளது. ஸ்மார்ட் போன்களுடன் மாணவர்கள் அதிக நேரம் செலவிடுவதன் காரணமாக, வகுப்பறையில் மாணவர்களின் கவனம் சிதறடிக்கப்படுகிறது -இதனால் மன அழுத்தம் உருவாகிறது-.ஸ்மார்ட் போன்களால் மாணவர்களின் படைப்பாற்றல் பாதிக்கப்படுவதுடன்,பகுத்து உணரும் அறிவையும் மாணாக்கர்கள் இழக்கிறார்கள் என யுனெஸ்கோ எச்சரித்துள்ளது. .
ஸ்மார்ட் போன்களுக்குள் சைத்தான் ஒளிந்து கொண்டு மனச்சிதவை ஏற்படுத்துவதோடு, ஒழுக்கக்கேட்டையும் விதைப்பதால்,இங்கிலாந்து,, பிரான்ஸ்,, நெதர்லாந்து உள்ளிட்ட 6 நாடுகள் பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளன.
ஏனைய நாடுகளும் கல்விக்கூடங்களில் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என யுனெஸ்கோ வலியுறுத்தியுள்ளது.
நாமும் விழித்துக் கொண்டால் நல்லது
000