காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறை செல்லாமல் தப்பிக்க வழி உண்டா என்று அவரை போற்றுகிறவர்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர் சிறையில் அடைக்கப்படுவதைக் காண்பதற்கு அரசியல் எதிரிகள் இன்னொரு பக்கம் காத்திருக்கிறார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாட மாநிலம் கோலாரில் நடைபெற்றக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடியை ‘மோடி’ என்ற பெயர் கொண்ட வேறு சிலரோடு சேர்த்துக் கூறிய கருத்துகளே கிரிமனல் அவதூறு வழக்கானது. அந்த வழக்குதான் ராகுலுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
குஜராத் உயர்நீதிமன்றத்தில் அவருடை மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தார். மேலும் ராகுல் காந்தி மீது10 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டிய நீதிபதி,இந்த வழக்கில் தண்டனையை ரத்து செய்யுமாறு அவர் தரப்பு முன் வைக்கும் கோரிக்கைகள் ஏற்புடையது அல்ல என்று கூறியிருந்தார். தீாப்பை வழங்கிய நீதிபதி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கான அவகாசத்தை வழங்கி அது வரை தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் கார்கே , “ராகுல் காந்தி மீதான வழக்கை சட்டப்படியும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்” என்று தெரிவித்து உள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த வழக்கறிஞருமான ப. சிதம்பரம் “இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட நாளில் இருந்து ராகுல் காந்திக்குதான் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டு உள்ளது” என்று கூறியுள்ளார். “இறுதியில் நீதி கிடைக்கும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
பொதுவாக மேல்முறையீடு என்பது ஒரு மாதத்திற்குள் செய்யப்படுவதுதான் நடைமுறையாக உள்ளது.எனவே ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படுவது அவசியமாகும்.
ராகுல் காந்தி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிசேக் சிங்வி இந்த வழக்கை நடத்தி வருகிறார். அவர்தான் சூரத் நீதிமன்றத்திலும் பின்னர் குஜராத் உயர்நீதிமன்றத்திலும் ஆஜராக வாதிட்டார். எனவே அவருடைய தலைமையிலான வழக்றிஞா் குழுதான் மேல் முறையீட்டை எடுத்துச் செல்ல இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கும் தீர்ப்புதான் ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக இருக்கும். எனவே அந்த தீப்பை அறிய அனைத்துத் தரப்புமே ஆர்வம் காட்டுவதால் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது.
000