ஜுலை, 18-
அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையால் அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன ஆனார் என்பதை பலரும் மறந்து விட்டார்கள்.
அதிமுக ஆட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கியது தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்ட அவர் ஓரிரு நாள் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்தார். அதன் பிறகு தனியார் மருத்துவமனையான காவேரியில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை காரணமாக அவரிடம் அமலாக்கதுறை விசாரணை நடத்த முடியாத சூழலும் ஏற்பட்டது.
உடல் நிலை ஓரளவு குணமடைந்ததை அடுத்து நேற்று செந்தில் பாலாஜியை பலத்த பாதுகாப்புடன் கொண்டு சென்று சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அங்கு, அவருக்கு முதல் வகுப்பு கைதிகளுக்கான அறை தரப்படும் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அவர் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதால் புழல் சிறையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவரை சிறை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இன்னும் நான்கைந்து நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் இருப்பார் என்றும் அதன் பிறகு கைதிகளுக்கான அறைக்கு மாற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. “செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருந்த நாட்களை நீதிமன்றக் காவலாக கருத முடியாது, எனவே முதல் 15 நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்துவிட்டதால் அவரை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தடை இல்லை” என்றும் உயர்நீதிமன்றத் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்து இருந்தது. இந்த தீர்ப்பை அடுத்து செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தை நாட அமலாக்கத் துறை தீர்மானித்து உள்ளது.
இதற்கு எதிராகவே செந்தில் பாலாஜி தரப்பில் மேல் முறையீடு செய்யப்ட்டு உள்ளது. இந்த மனு மீது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை அடுத்தே அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா என்பது தெரியவரும்.
000