ஏப்ரல்.15
சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி பகுதியில் பிரவீன் ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருக்கும்பொழுது ஒரு அறையில் தரைச்சக்கரம் செய்வதற்கு மருந்து செலுத்தி கொண்டிருந்தபோது ஏற்பட்ட உராய்வில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், ஒரு அரை முழுவதும் இடிந்து தரைமட்டமானதில், அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த இடையன்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி ,தங்கவேல் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
கருப்பம்மாள், மாரிதாய் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வெடி விபத்து குறித்து மாரனேரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.