சீனாவை மிஞ்சி இந்தியா உலகத்திலேயே அதிக மக்கள் தொகைக் கொண்ட நாடு என்ற பெரும் பேரை பெற்றுவிட்டது. இன்றைய நாளில் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தியாவின் மக்கள் தொகை 142.86 கோடியாகும். சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாகும்.
கடந்த 1950 ஆம் ஆண்டில் இருந்துதான் ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகை விவரங்களை ஐ.நா கணக்கிட்டு வெளியிட ஆரம்பித்தது. அப்போது சைனா உலகத்திலேயே அதிக மக்கள் தொகைள் கொண்ட நாடு என்று அறிவிக்கப்பட்டது. அன்று முதல் இன்று காலை வரை 73 ஆண்டுகள் சைனா அந்த இடத்தை தக்க வைத்திருந்தது. இன்று இந்தியா அதனை முறியடித்து உலகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பேரை பெற்று இருக்கிறது.
இதே வேளையில் உலக நாடுகளின் மொத்த மக்கள் தொகை எட்டு நூறு கோடியே 45 லட்சம் ஆகும்
இந்தியாவில் ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு கடைசியாக கணக்கெடுப்பு நடந்தது. அடுத்து 2021 ஆம் ஆண்டில் எடுக்கப்பட வேண்டிய கணக்கெடுப்பு கோவிட் பரவல் காரணமாக தள்ளிப்போய், இன்னும் சில மாதங்களில் தொடங்கப் பட உள்ளது.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினர் ( 25 விழுக்காடு) 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்,சிறுமிகள். எஞ்சியவர்களில் 68 சதவிகிதத்தினர் 14 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள். மீதி உள்ள 7 சதவிகிதம் மக்களும் 65 வயதுக்கு மேலானவர்கள்.
சீனா நாடானது இந்தியாவை விட மூன்று மடங்கு பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடாகும். அதன் மொத்த நிலப்பரப்பு 96 லட்சம் சதுர கிலோ மீட்டர். இந்தியாவின் நிலப்பரப்பு 33 லட்சம் சதுர கிலோ மீட்டர்தான். இந்தக் கணக்குப்படி பார்த்தால் இந்தியா, குறைந்த இடத்தில் அதிகம் பேர் வசிக்கக் கூடிய நாடாகும்.