கையில் காசும் கிடைத்து நேரமும் இருந்து எங்காவது இரண்டு, மூன்று நாள் சுற்றிவிட்டு வரவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு இருக்கிற பெரிய பிரச்சினையே எங்கு செல்வது என்பதுதான். சுற்றுலாவோ அல்லது இரண்டு நாள் ஓய்வோ என்றால் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது உதகமண்டலம் அல்லது கொடைக்கானல்தான்.
இரண்டு இடங்களிலும் பிப்ரவரி வரை பனியும் குளிரும் அதிகம் என்பதால் போனாலும் கையைக் கட்டிக்கொண்டு சுற்ற வேண்டும். காலையில் எழுந்து ஆசையாக வாக்கிங் போக முடியாது. மணி பத்து வரை ரூமில் அடைந்து கிடக்கவேண்டும். உள்ளுரிலேயே நல்ல குளிர் இருக்கையில் இந்த இரண்டு இடங்களும் இப்போது எதற்கு என்ற கருத்தும் எழக்கூடும். அது மட்டுமில்லாமல் இப்போதே உதகமண்டலம் அல்லது கோடைக்கானல் சென்று விட்டால் அப்புறம் கோடைக் காலத்தில் எங்கு செல்வது என்று எண்ணி இந்த இரண்டு இடங்களையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிடுகிறவர்கள் இருக்கிறார்கள்.
வேறு இடங்கள் என்னென்ன இருக்கின்றன என்று பார்க்கலாம்.
உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் கொடைக்கானலைத் தவிர்த்து மற்றைய மலைப் பகுதி சுற்றுலா மையங்கள் என்றால் ஏற்காடு, டாப்சிலிப், வால்பாறை, கொல்லிமலை, சிறுமலை, மேகமலை போன்றவை நினைவுக்கு வருகிறது.இந்த இடங்களுக்கும் கோடைக்காலத்தில் போகலாம் என்றால் வேறு என்ன இடம் இருக்கிறது?
கேரளாவில் மூனாறு, தேக்கடி, வயநாடு,ஆலப்புழை, கோவளம் அல்லது கர்நாடகத்தில் பெங்களுர், மைசூர், கூர்க் போன்ற இடங்களுக்குச் சென்று வரலாம்.
தமிழ்நாடு என்று பார்த்தால் கன்னியாகுமரி. சூரிய உதயம், மறைவு. வள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம்,கொஞ்சம் படகு சவாரி.
மதுரைப் பக்கம் சென்றால் மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், கீழடி, திருப்பரங்குன்றம்.
பாண்டிச்சேரி என்றவுடன் நினைவுக்கு வருவது அரவிந்தர் ஆசிரமம், கடற்கறை.மதுப்பிரியர்களுக்கு ஏற்ற இடமும் கூட.
சென்னைக்கு வந்தால் மெரினா, மெட்ரோ ரயில், வண்டலுர், பக்கத்தில் உள்ள மாமல்லபுரம், பெரிய பெரிய மால்கள்.
தஞ்சாவூர்,கும்பகோணம் என்றவுடன் கோயில்கள். காவிரி டெல்டாவின் பச்சைப் பசேல் நெல் வயல்கள். கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள்.
இவற்றில் எந்த இடத்துக்குப் போவது என்ற யோசித்துக் கொண்டே இருந்தால் நாட்கள்தான் கடந்து போகும். ரொம்ப யோசித்தால் எங்கும் போக முடியாமல் போய்விடும்.
தமிழ்நாடாகட்டும் தென்னிந்தியாவாகட்டும் காரிலே,பேருந்திலோ, ரயிலிலோ செல்வதற்கு ஏற்ற மாதங்கள் நவம்பர், டிசம்பர், ஜனவரி,பிப்ரவரிதான். மார்ச் தொடங்கிவிட்டால் ஆகஸ்டு முடியும் வரை வியர்வைக் குளியல்தான். நினைவில் இருக்கட்டும்.
……