சூடான் உள்நாட்டுப்போர் – 2,000 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு

ஏப்ரல்.28

ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே உள்நாட்டுப்போர் நடைபெற்றுவருகிறது. தலைநகர் கார்தூம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் இரு தரப்பிடையே சண்டை நடந்துவருகிறது.

இந்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலில் இருந்து, அங்குள்ள வெளிநாட்டினரை மீட்பதற்கு அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவும் ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் ஐ.என்.எஸ். சுமேதா, ஐ.என்.எஸ். டெக், ஐ.என்.எஸ் தர்காஷ் மற்றும் விமானப்படையின் 2 சி-130ஜே ரக விமானங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.இவற்றின் மூலம் இந்தியர்கள் விரைவாக மீட்கப்பட்டு வருகின்றனர்.

போர் சூழலில் சிக்கியுள்ள அவர்களை விரைவாக மீட்டு சூடான் துறைமுகத்துக்கு அழைத்துவந்து, அங்கிருந்து போர்க்கப்பல்கள் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இதில் 360 பேர் அடங்கிய முதல் குழுவினர் நேற்று முன்தினம் டெல்லி வந்தநிலையில், மேலும் 246 இந்தியர்களுடன் நேற்று ஒரு விமானம் மும்பை வந்தடைந்தது. இந்த நிலையில் சூடானில் இருந்து இதுவரை 1,700 முதல் 2 ஆயிரம் வரையிலான இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா, சூடானில் சுமார் 3,500 இந்தியர்கள் மற்றும் சுமார் 1,000 இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்டுவர கார்தூமில் உள்ள இந்திய தூதரகமும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. சூடானில் தாக்குதல் தீவிரமாக நடைபெறுவதால் மிகவும் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது.

தலைநகர் கார்தூம் நகரை ஒட்டிய பகுதிகளுக்குச் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. எனினும், கார்தூமிலிருந்து சூடான் துறைமுகம் வரையிலான 850 கி.மீ தொலைவுக்கு ஒரு தரைவழிப் பாதையை கண்டுபிடித்து, அத்துடன் துறைமுகத்தில் இந்திய கடற்படைக் கப்பல்கள் மற்றும் 2 விமானப்படை விமானங்கள் தரையிறங்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கி உள்ளது.

இந்த 850 கி.மீ. தூரத்தை கடப்பதற்கான பயண நேரம் 12 முதல் 18 மணிநேரம் வரை ஆகும். மேலும் பேருந்துகளுக்கான டீசல் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. இதுவரை 600-க்கு மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில், ஜெட்டாவில் சுமார் 500 பேரும், சூடான் துறைமுகத்தில் 320 பேரும் நாடு திரும்ப காத்திருக்கின்றனர். இவர்களை தவிர ஏராளமான இந்தியர்கள் கார்தூமில் இருந்து சூடான் துறைமுகம் நோக்கி பஸ்களில் சென்றுகொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 1,700 முதல் 2,000 இந்தியர்கள் வரை சூடானில் இருந்து மீட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *