ஏப்ரல்.29
இங்கிலாந்து நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் இறப்புக்களைத் தடுக்க புதிய யுக்தியை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இங்கிலாந்து உட்பட உலகம் முழுவதும் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரிப்பால் ஆன்லைன் சூதாட்டப்பிரச்னை பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. இங்கிலாந்திலும் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும்வகையில், இங்கிலாந்து அரசு பொதுமக்கள் மற்றும் சூதாட்ட நிறுவனங்கள் என யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் புதிய சட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒரு முறை சூதாடுவதற்கு அதிகபட்சமாக 2 பவுன்ட் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 200 ரூபாய் வரை ) மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கவும் இங்கிலாந்து அரசு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சூதாட்டத்திற்கு அடிமையானவர்களை மீட்பதற்கு அந்த தொகையை பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை விரைவில் சட்டமாக்கவும் இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.