ஜுலை, 14-
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது அல்ல என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பை ஏற்பதாக மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார்.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு மீது அவர் இந்த தீர்ப்பை அளித்து இருக்கிறார்.
மேகலாவின் ஆட்க்கொணர்வு மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகளில் நிஷா பானு, செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்பதால் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்து இருந்தார். ஆனால் நீதிபதி பரத சக்கரவர்த்தி, செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது அல்ல என்று தீர்ப்புக் கூறியிருந்தார்
இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய காரணத்தால் வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி கார்த்திகேயன் நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் இந்த வழக்கில் இரண்டரை நாட்கள் நடத்திய விசாரணைக்குப் பிறகு உணவு இடைவெளிக்கு கூட செல்லாமல் இன்று பிற்பகல் தீர்ப்பளித்தார்.
“அமலாக்கத் துறைக்கு காவல்துறைக்கு உரியது போன்ற அதிகாரம் வழங்கப்படவில்லை என்றாலும் கைது செய்யப்பட்டவர்களை காவலில் வைத்து விசாரிக்க அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறவில்லை.
வழக்கு ஒன்றில் கைது குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் அப்பாவி என்று நிரூபிக்க உரிமை உள்ளது , ஆனால் விசாரணை தடை கேட்க முடியாது. கைது செய்யப்படுதறக்கான காரணங்களை அமலாக்கத்துறை வழங்கிய போது பெற்றுக்கொள்ள மறுத்து விட்டு அதனை அமலாக்கத் துறை வழங்கவில்லை என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல.
கைது செய்யும் அதிகாரம் உள்ள அமலாக்கத் துறையினர், காவலில் எடுத்து விசாரிப்பதற்கும் அனுமதி பெற்றவர்கள் தான்.கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை புலன் விசாரணையை தொடரலாம்.
அமலாக்கத் துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்து தீர்ப்பு ஏற்கத் தக்கதுதான்.
இதேபோன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை முதல் 15 நாள் நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா என்பதை பொறுத்தவரை, சட்டப்படி, ஒருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ள முதல் 15 நாட்களில், காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். அதன் பின் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது. தற்போது சிகிச்சையில் உள்ளதால் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்று அமலாக்கத் துறை தரப்பு வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது. சிகிச்சையில் இருந்த காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியாது. அவரை காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரிக்கலாம்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நாளன்று காலை முதல் அமலாக்கத் துறையினர் அவருடைய வீட்டில் இருந்துள்ளனர். கைது செய்யப்படுவதற்கான காரணங்கள் செந்தில் பாலாஜிக்கு தெரியும். அவரது கைது குறித்து சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. செந்தில் பாலாஜி கைது சட்டப்படியானது; அவரை நீதிமன்றக் காவலில் வைத்ததும் சட்டப்படியானது; ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல”
இவ்வாறு நீதிபதி கார்த்திகேயன் தமது தீர்ப்பில் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பை ஏற்பதாக தெரிவித்த நீதிபதி கார்த்திகேயன், இந்த தீர்ப்பை தலைமை நீதிபதிக்கு தாக்கல் செய்யுமாறு பதிவாளருக்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் தலைமை நீதிபதி பட்டியலிடுவார் என்றும், அதன்பின்னர் மேகலாவின் ஆட்கொணர்வு மனு மீதான இறுதி முடிவை அந்த அமர்வே அறிவிக்கும் என நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.
மேகலாவின் மனு ஏற்கப்பட்டதா அல்லது தள்ளுபடி செய்யப்பட்டதா என்பது குறித்தும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் எந்த தேதியில் இருந்து துவங்குகிறது என்பது குறித்தும் நீதிபதி நிஷாபானு, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முடிவு செய்யும் எனவும் நீதிபதி கார்த்திகேயன் தனது உத்தரவில் தெளிவுபடுத்தி உள்ளார்.
மூன்றாவது நீதிபதி தீர்ப்பின் மூலம் தெரிய வருவது என்னவென்றால் இப்போது மருத்துவமனையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறைக்கு அதனுடைய காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் அனுமதி கிடைக்கும் என்பதுதான்.
000