ஜுலை,27-
தமிழக அமைச்சரவையில் மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆகிய வளமான துறைகளின் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.
சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கடந்த ஜுன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
‘செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது,சட்டப்பூர்வமானது-அவரை காவலில் எடுத்து விசாரிக்க , அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது’ என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள, செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் ஒப்படைக்கப்பட்டது. மது விலக்கு மற்றும் ஆய்த்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கு அளிக்கப்பட்டது.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்கிறார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த வண்ணம் உள்ளன.
இந்த விமர்சனங்களை தவிர்க்கும் வகையில் , செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கும் வரை அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
’சிறையில் உள்ள ஒருவரை அமைச்சர் பதவியில் நீடிக்க விட்டால், மக்கள் மத்தியில் வெறுப்பு உணர்வு ஏற்படும்-கட்சிக்கும் ஆட்சிக்கும் அவப்பெயர் உண்டாகும் ‘என மூத்த அமைச்சர்கள் முதல்வருக்கு ஆலோசனை சொல்லியுள்ளார்களாம்.
இதனை ஏற்று, செந்தில் பாலாஜியை நீக்க முதல்வர் முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்ததால்,அவர் புழல் சிறையில் இருந்தபடி காணொலி காட்சி வாயிலாக மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி எஸ்.அல்லி,அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை அவரது காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.செந்தில் பாலஜியின் காவல் நீடிக்கப்படுவது மூன்றாவது முறையாகும்.
000