June 14, 23
பாஜகவின் கிளை அமைப்புகள் போலவே அமலாக்கத்துறை செயல்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்தவிதமான விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. அமலாக்கத்துறையினர் தங்களின் எஜமானார்களான மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை திருப்திப்படுத்தியுள்ளனர். திமுகவை மட்டுமின்றி அதிமுகவையும் மிரட்ட விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது. கூட்டணியை மறுபரிசீலனை செய்வோம் என அதிமுக கூறியதால் உங்களையும் கைது செய்வோம் என அதிமுகவினரை பாஜக மிரட்டுகிறது.
செந்தில் பாலாஜி உடல்நிலை பாதிக்கும் வகையில் அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை 18 மணி நேரத்துக்கும் மேல் அடைத்துவைத்து டார்ச்சர் செய்துள்ளனர். திமுக மீதும், திமுக தலைவர்கள் மீதும் எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியாமல் பாஜக திண்டாடுகிறது. சட்டப்பேரவை தேர்தலில் தான் தோற்றதற்கு செந்தில்பாலாஜியே காரணம் என்று நினைத்து அவரை பழிவாங்கும் நோக்கத்தில் அண்ணாமலை சுற்றித்திரிகிறார். உள்ளாட்சித் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி திமுக அமோக வெற்றி பெற்றதற்கு செந்தில் பாலாஜியே காரணம். வரும் 23 ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தால் பாஜக பதற்றத்தில் உள்ளது.
பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டுவருவதால் பழிவாங்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபடுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் திமுக-வை களங்கப்படுத்த பாஜக முயற்சிக்கிறது. ஒன்றிய பாஜக ஆட்சியின் தோல்விகளை மறைக்க நடத்தும் நாடகம்தான் கைது நடவடிக்கை. எதிர்க்கட்சிகள் மீது களங்கம் ஏற்படுத்துவது மட்டுமே பாஜகவின் குறிக்கோள்” என்றார்.