இது வரை திரட்டப்பட்ட ஆதராங்கள் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பணப் பறிமாற்றத்தில் மோசடி செய்து இருப்பதற்கான சான்றுகள் உறுதியாகி இருப்பதாக அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் அமலாக்க பிரிவு தாக்கல் செய்து உள்ள பதில் மனுவில் கூறி இருப்பதாவது…
செந்தில் பாலாஜியை ஜூன் 14-ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்படும் முன் அவரை சட்ட விரோதக் காவலில் வைக்கவில்லை. அதற்கு முன்தைய நாளான ஜூன் 13-ஆம் தேதி சென்னை வீட்டில் நடந்த சோதனையின் போது அமைச்சர் அங்கு இருந்தார். அவரை சட்ட விரோதமாக சிறை பிடித்ததாக கூறுவது தவறு.விசாரணைக்கு ஆஜராக கூறி ஜூன் 13-ம் தேதி சம்மன் அளித்த போது, அதை செந்தில்பாலாஜி பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். அதிகாரிகளை மிரட்டும் தொணியில் நடந்து கொண்டார். விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக கைது செய்திட நேரிட்டது.
சாட்சிகளை கலைத்து, ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் அவர் கைது செய்யப்பட்டார். இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களில் இருந்து, செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற குற்றம் புரிந்துள்ளார் என நம்புவதற்கு போதுமான சான்றுகள் கிடைத்து உள்ளன.பெருந்தொகை டிபாசிட் செய்யப்பட்டதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. கைது செய்யும் முன்பு அதற்கான காரணங்கள் விளக்கப்பட்டது. குடும்பத்தினருக்கு குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சல் மூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டது.கைது செய்யப்படும் போது அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன.
செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை அமலாக்கத் துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. எனவே அவரை காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.
இவ்வாறு அமலாக்கத்துறை மனுவில் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் , மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் தன் கணவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று 2022 – ஆகஸ்ட் முதல் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருவதாக கூறியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை முறையாக பரிசீலிக்காமல் அவரை நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது. எனவே அவரை விடுவிக்க வேண்டும் என்றும் கூடுதல் மனுவில் மேகலா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் மீது உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணை நடைபெற்றது. அடுத்த விசாரணை செவ்வாய்க் கிழமை நடைபெற இருக்கிறது. அமலாக்கத் துறை சார்பில் சொலிசட்டல் ஜெனரல் துஷார் மேத்தாவும் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும் ஆஜராகி வாதாட உள்ளனர்.
000