சென்னை..ஜூன் 14.. அமைச்சர் செந்தில் பாலாஜியின் எதிர்காலம் அடுத்து எப்படி இருக்கும் என்று ஆராயும் போது அவர் முதலில் அமைச்சர் பதவியை விட்டு விலக வேண்டும் என்பது உறுதியாகி உள்ளது.
2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வழங்குவதாகக் கூறி பண மோசடி செய்தார் என்பது வழக்காகும். இந்த வழக்கில் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதில் திடீர் திருப்பமாக பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குப் பணம் கிடைத்துவிட்டதாக கூறியதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் செந்தில்பாலாஜி உள்ளிட்டவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தர்மராஜ் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், குற்ற வழக்குகளை விசாரிக்காமல் ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் ஆணை பிறப்பித்தது.
உடனே அமலாக்கத்துறை லஞ்ச விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றது தொடர்பாக தாங்களும் விசாரணை நடத்த அனுமதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் போக்குவரத்துறையில் வேலை வழங்க பணம் பெற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த அனுமதி கொடுத்தனர். இது தொடர்பாகத்தான் செந்தில்பாலாஜிக்கு உரிய இடங்களில் செவ்வாயன்று சோதனை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்து உள்ளது,
இதே போன்று, மது பான கொள்கைத் தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணிஷ்குமார் சிசோடியா சில மாதங்கள் முன் கைது செய்யப்ட்டார். சிறையில் அடைக்கப்பட்ட முதல் வாரம் வரை அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் சிசோடியா பதவி விலக நேரிட்டது. இன்று வரை ஜாமீன் கிடைக்கவில்லை. டெல்லி திகார் சிறையில்தான் சிசோடியா இருக்கிறார்.
செந்தில் பாலாஜிக்கும் ஜாமீன் கிடைக்காத பட்சத்தில் அவர் சிறையில் இன்னும் சில நாட்கள் இருக்கவேண்டியது தவிர்க்க முடியாதது. அப்போது அவர் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தே ஆகவேண்டும். சிறையில் இருந்த விடுவிக்கப்பட்ட பின் முதலமைச்சர் விரும்பினால் அவரை மீண்டும் அமைச்சர் நாற்காலியில் உட்கார வைக்கலாம்.