செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத் துறைக்கு சறுக்கலா ?

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று அவருடைய மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது

இந்த மனுநீதிபதிகள் நிஷா பானு, பரத் சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜி மறுத்ததாகவும், கைது தொடர்பாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், இதன் மூலம்
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என குறிப்பிட்டார்.

மேலும், நாடாளுமன்றம் இயற்றிய சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் காவல் நிலைய அதிகாரி அதிகாரம் அமலாக்கத் துறையினருக்கு வழங்காத நிலையில், அந்த அதிகாரத்தை நீதிமன்றம் வழங்க முடியாது என்பதால் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கப் பிரிவுக்கு அதிகாரமில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்ற காவலில் வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இல்லை எனவும், நீதிமன்ற காவலில் வைத்த உத்தரவை எதிர்த்தோ, ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தோ வழக்கு தொடரவில்லை எனவும், ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிட்டார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில், ஆதாரங்கள் இருந்தால் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உரிய ஆதாரங்கள் இல்லாமல் கைது நடவடிக்கை மேற்கொண்டால் சம்பந்தபட்ட அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட துஷார் மேத்தா , செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட 10 மணி நேரத்துக்குள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது; கைதுக்கான காரணங்களும் தெரிவிக்கப்பட்டது; ஆனால் செந்தில் பாலாஜி அதைப் பெற மறுத்து விட்டார் என்றார்.

காவலில் வைத்து விசாரிக்க அமர்வு நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளால், செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பது இயலவில்லை எனவும், முதல் 15 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோராவிட்டால் அமலாக்கப் பிரிவு தனது கடமையை செய்ய தவறியதாகி விடும் எனவும் தெரிவித்தார்.

உணவு இடைவேளைக்கு பின் வாதத்தை தொடர்ந்த துஷார் மேத்தா, ஆரம்பத்தில் இருந்து செந்தில்பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. சம்மன் அனுப்பினாலும் பதில் இல்லை. கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை எனவும், அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது திமுகவில் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கு எதிராக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறமுடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்றார்.

வழக்கில் ஆதாரங்களும், அடிப்படை முகாந்திரமும் இருப்பதாக நீதிமன்ற உத்தரவுகள் தெரிவித்துள்ளதாகவும், செந்தில் பாலாஜி சிகிச்சையில் உள்ளதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை எனவும், அவர் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவலில் உள்ள காலமாக கருதக் கூடாது என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு போலீசாரின் அதிகாரம் வழங்காததால் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை என கூற முடியாது எனவும், சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்க துறை காவலில் வைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ளதால், ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி , சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது என கோர முடியாது. அதற்கு எந்த சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை. 15 நாட்கள் முடிந்தது; முடிந்தது முடிந்தது தான் எனக் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கலாம். கொரோனாவாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி 15 நாட்களுக்கு மேல் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது என்றும் வாதிட்டார். மேலும் 15 நாட்கள் முடிந்து விட்டால் உலகம் முடிவுக்கு வந்து விடாது. வழக்கின் புலன் விசாரணையை தொடர அமலாக்கத் துறைக்கு அதிகாரம் உள்ளது ஆகவே தற்போதைக்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

முகுல் ரோத்தஹி வாதத்துக்கு பதிலளித்த அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, காவலில் வைத்து விசாரிப்பது அமலாக்கத் துறையின் உரிமை எனவும், காவலில் வைத்து விசாரிக்க 8 நாட்கள் அனுமதி வழங்கப்பட்ட போதும் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க முடியாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *