செந்தில் பாலாஜி விவகாரத்தில் அடுத்தது என்னவாக இருக்கும்? நாளை நடைபெறும் வழக்கில் என்ன முடிவு ஏற்படும்?

ஜுலை, 10-

கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அடுத்த இரண்டு நாட்கள் முக்கியமானதாகும்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக் கழகத்தில் வேலை கொடுப்பதாகக் கூறி பணம் வசூலித்து ஏமாற்றினார் என்பது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான புகாரகும். இந்த புகார்களுக்கு நடுவே அவருக்கு வேண்டியவர்கள் வீட்டில் கடந்த மாத தொடக்கத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. கரூரில் அவருடைய தம்பி அசோக் குமார் வீட்டில் சோதனை நடத்த வந்த அதிகாரிகள் திமுகவினரால் தாக்கப்பட்ட புகார் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இதன் அடுத்த கட்டமாக கடந்த மாதம் 13 -ஆம் தேதி சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சட்ட விரோத பணப் பறிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்ததால் அவருடைய வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக அவர்கள் விளக்கம் சொன்னார்கள். அன்று தொடங்கிய சோதனையின் தொடர்ச்சியாக ஜூன் 14-ஆம் அதிகாலை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க நேரிட்டது. பின்னர் நீதிமன்ற அனுமதியோடு தனியா் மருத்துவமனையான காவேரிக்கு மாற்றப்பட்டார்.அங்கு அவருக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை நடந்தது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று கூறி ஆட்கொணர்வு மனுவை அவருடைய மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் தாக்கல்  செய்தார்.

இது ஒரு புறம் என்றால் செந்தில் பாலாஜியிடம் எட்டு நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது. ஆனால் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் போது விசாரிப்பது சாத்தியமில்லை என்று கூறி அமலாக்கத் துறை விசாரணை நடத்த மறுத்துவிட்டது.

இந்த சூழலில் ஆட்கொணர்வு மனு மீது விசாணை நடத்திய நீதிபதிகள் நிஷா பானு,பரத் சக்கரவர்த்தி இருவரும் கடந்த வாரம் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்ததால் செந்தில் பாலாஜி விவகாரம் ஒரு முடிவுக்கு வரவில்லை.

இரண்டு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் ஆட்கொணர்வு மனு விசாரணை மூன்றாவது நீதிபதியான கார்த்திகேயன் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது அவர் , இதற்கு முன்பு விசாரணை நடத்திய இரண்டு  நீதிபதிகள் அமர்வு முன் வைக்கப்பட்ட பிரச்சினைகளைத் தவிர வேறு விவாதங்களை நடத்தக் கூடாது என்றும் விசாரணை 11 மற்றும் 12 ஆகிய இரண்டு நாட்களும் நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார்.

1, காவல் துறை போல ஒருவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லை என்பது மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தரப்பு வாதமாகும். இது தொடர்பாக இரு தரப்பும் வாதங்களை முன் வைக்க வேண்டும்.

2, செந்தில் பாலாஜி கைது செய்து நீதி மன்றக் காவலில் கொண்டு வரப்பட்டுவிட்டப் பிறகு அவருடைய மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்புடையதா? இல்லையா? என்பதற்கான சட்ட ஆதாரங்களை இரு தரப்பு வழக்கறிஞர்களும் விளக்க வேண்டும்.

3, ஒருவரை கைது செய்தால் முதல் 15 நாட்களுக்குள் தான் காவலில் எடுத்து விசாரிக்க முடியும். இப்போது அந்த 15 நாள் கால  வரையறை முடிவடைந்து விட்டதால் இனிமேல் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க சட்டத்தில் இடமில்லை என்பது என்.ஆர். இளங்கோ வாதமாகும். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கைது செய்யப்பட்ட பிறகு அமைச்சர் மருத்துவமனையில் இருந்ததால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. எனவே குணமடைந்த பிறகு அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மூன்று அம்சங்கள் பற்றி மட்டுமே வாதங்களை முன் வைக்க வேண்டும் என்பது நீதிபதி கார்த்திகேயனின் உத்தரவாகும்.

நாளை ( செவ்வாய் கிழமை) நடை பெறும் விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல்,என்.ஆர். இளங்கோ  இருவரும் வாதம் செய்கின்றனர்.

நாளை மறுதினம் ( புதன் கிழமை) விசாரணையில் அமலாக்கத்துறை தரப்பில் துஷர் மேத்தா வாதாட உள்ளார்.

இந்த இரண்டு நாள் விசாரணை முடிவில் மூன்றாவது நீதிபதி அளிக்க உள்ள தீர்ப்புக்குப் பிறகே செந்தில் பாலாஜி வழக்கில் ஒரு முடிவு தெரியவரும்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *