June 07, 23
ஹஜ் புனித யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் முதல் குழுவை அமைச்சர் செஞ்சு மஸ்தான் வழியனுப்பி வைத்தார்.
இஸ்லாமியர்களின் 5 பெரும் கடமைகளில் ஹஜ் புனித யாத்திரையும் ஒன்று. பக்ரீத் பண்டிகை வரும் 29ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நேரத்தில், புனித ஹஜ் யாத்திரையாக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு செல்வது வழக்கம்.
இந்தியாவில் இருந்தும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் முதல் குழு இன்று புறப்பட்டது. ஜெட்டா செல்லும் சிறப்பு விமானங்களில்,
தமிழ்நாடு, புதுச்சேரி, மாநிலங்களை சேர்ந்தவர்கள் பயணத்தைத் தொடங்கினர்.
இந்த சிறப்பு தனி விமானங்கள் இன்று முதல், வரும் 21ஆம் தேதி வரையில்
இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களில் சுமார் 4,000 க்கும் மேற்பட்ட ஹஜ் பயணம்
மேற்கொள்ள இருக்கின்றனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, காலை 11:20 மணிக்கு முதல் சிறப்பு விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 254 ஹஜ் யாத்திரிகர்கள் சென்றனர். இதை அடுத்து இரண்டாவது விமானம் நாளை காலை 12:10 மணிக்கு சென்னையில் இருந்து ஜெட்டா புறப்படுகிறது. அதில் 162 யாத்திரிகர்கள் செல்கின்றனர்.
ஹஜ் யாத்திரை செல்லும் முதல் குழுவினரை சென்னை சர்வதேச விமான நிலையத்தில், மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார்.
இவர்கள் ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு வரும் ஜூலை முதல் வாரத்தில், இதை போல்
தனி சிறப்பு விமானங்களில் சென்னை திரும்புவார்கள். ஹஜ் யாத்திரை பயணத்திற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இணை மானியமாக ரூ.10 கோடியை தமிழ்நாடு
முதலமைச்சர் அறிவித்துள்ளார் என தெரிவித்தார்.
மேலும், கள்ளச்சாராயத்திற்கு உடந்தையாக செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டிய நிலையில் அது குறித்து செய்தியாள்ர்களிடம் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:
மடியில் கனமில்லை; அதனால் வழியில் பயம் இல்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு வேறுசெய்தி இல்லை, அதனால் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து பலமுறை அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளேன். குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் மக்கள் என்னை ஆதரிக்க மாட்டார்கள். குற்றம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை
மேற்கொண்டுள்ளோம். தவறுகள் செய்தவர்கள் மீது குண்டர் சட்டம்
போடப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதே போல் தொடர்ந்து நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.