சொத்துப்பட்டியலை வெளியிட்ட முதலமைச்சர் – ஒடிசாவில் அரங்கேறிய ஆச்சரியம்..!

மே.21

ஒடிசா மாநிலத்தில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் மற்றும் அமைச்சர்கள் தங்களது சொத்துப்பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் தங்களது சொத்துப் பட்டியலை இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி முதலமைச்ச்ர நவீன் பட்நாயக்குக்கு ரூ.65 கோடியே 40 லட்சம் சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021-22 ஆண்டில் நவீன்பட்நாயக்கின் அசையும் சொத்துக்கள் மதிப்பு அதிகரித்துள்ளது, ஆனால் அசையாச் சொத்துகளின் மதிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை.
அதன்படி, அசையும் சொத்துகள் மதிப்பு ரூ.12 கோடியே 52 லட்சம் என்றும், அதில் டெல்லி, புவனேசுவரம், ஹிஞ்சிலிகட். பர்கார் ஆகிய இடங்களில் உள்ள வங்கிக்கணக்கு இருப்புகள், நகைகள், கார் உள்ளிட்டவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அசையாச்சொத்துகள் பட்டியலில், புவனேசுவரம் விமான நிலையம் அருகே உள்ள அவரது நவீன் நிவாஸ் பங்களாவின் மதிப்பு ரூ.9 கோடியே 52 லட்சத்து 46 ஆயிரத்து 190 என்றும், டெல்லியில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சாலையில் அமைந்துள்ள ரூ.43 கோடியே 36 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான சொத்தில் பாதி, நவீன் பட்நாயக்கிற்கு இருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி அளவுக்கு வங்கியில் டெபாசிட்டுகள் உள்ளன. ரூ.9 கோடி மதிப்பில் ரிசர்வ் வங்கி பத்திரங்கள் வைத்துள்ளார். அஞ்சலக சேமிப்பு ரூ.1½ கோடி உள்ளது. டெல்லி ஜன்பத்தில் உள்ள வங்கியில் ரூ.70 லட்சம், புவனேசுவரத்தில் உள்ள பாரத ஸ் டேட் வங்கியில் ரூ.21 லட்சம் சேமிப்பு உள்ளது. ரூ.3½ லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.6,434 மதிப்பிலான 1980 மாடல் காரும் வைத்துள்ளார். ஒடிசாவில் 5 முறை முதலமைச்சர் பதவி வகித்துள்ள நவீன் பட்நாயக்கின் அசையா சொத்துகள் மதிப்பு ரூ.52 கோடியே 88 லட்சம் ஆகும். இவை அவரது பெற்றோர் பிஜூ பட்நாயக், கியான் பட்நாயக் வழி வந்தவை.

முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களான, அசோக் சந்திர பாண்டா, பிரித்தி ரஞ்சன் கடாய், ரானேந்திர பிரதாப் ஸ்வைன், பிரமிளா மாலிக், நிரஞ்சன் பூஜாரி, உஷா தேவி, அடானு சப்யசாகி நாயக், ராஜேந்திர தோயில்கியா, டுகானி சாகு, பிரதீப் குமார் அமத், பி.கே. தேப், பசந்தி ஹேம்ப்ராம், ரோகித் பூஜாரி, அஷ்விணி பத்ரா ஆகிய 14 பேர் கோடீஸ்வரர்கள். ஒடிசாவின் உருக்கு, சுரங்கத்துறை மந்திரி பிரபுல்லா மாலிக்கிற்கு ரூ.42 லட்சம் மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஒடிசா அமைச்சரவையில் இவர்தான் வசதி குறைந்த அமைச்சர். ஒடிசா அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரின் சொத்து மதிப்புகளும் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருப்பது அம்மாநில மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்திய அரசியல் வட்டாரத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *