“அறச்சீற்றம் கொண்டு கண்ணகி எரித்திட்ட மதுரை நகரத்தில், லட்சக்கணக்கான நூல்கள் கொண்ட இந்த நூலகத்தினால் அறிவுத் தீ பரவப் போகிறது என்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் மதுரையில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என நான் அடிக்கடி சொல்வது, கல்வியும் சுகாதாரமும்தான். அதனால் தான், கலைஞர் நூற்றாண்டு தொடக்கமான கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையை சென்னை, சைதாப்பேட்டை, கிண்டியில் திறந்து வைத்ததாகவும் கூறியுள்ளார்.
சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வான் இந்த ஸ்டாலின் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் சென்னையில் மருத்துவமனையும், மதுரையில் இந்த நூலகமும் என்று கூறிய அவர், இவை இரண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அளிக்காத வாக்குறுதிகள் என்றார்.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரைக்கும், குழந்தைகள் – மாணவர்கள் – போட்டித் தேர்வர்கள் – மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் ஆறு தளங்கள் – மூன்று லட்சம் புத்தகங்களைப் பெற்றிருக்கக்கூடிய இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க தலைவர் கலைஞரே சிலை வடிவமாக இங்கு காட்சியளித்துக் கொண்டிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
இன்றைக்கு திராவிட மாடல் அரசும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. தரமான கல்வி வழங்குவதில், இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்பதற்கான அனைத்துப் பணிகளையும் செய்து கொண்டு இருப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.