ஜூலை, 18-
மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பீகார் முதல் -அமைச்சர் நிதிஷ் குமார் ஏற்பாட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மக்களவை தேர்தலை ஓரணியில் திரண்டு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது.
26 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பாட்னா கூட்டத்தில் பங்கேற்காத சோனியா காந்தி,பெங்களூரு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில் தலைவர்களுக்கு சோனியா விருந்து அளித்தார்.
ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார், அரவிந்த் கெஜ்ரிவால்,லாலு பிரசாத் யாதவ்,உத்தவ் தாக்கரேமெகபூபா முப்தி, உமர் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி,வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
60 வகையான உணவுகள் விருந்தில் பரிமாறப்பட்டன. எல்லாமே கர்நாடக மாநில காங்கிரசின் முன்னணி தலைவரும் அமைச்சருமான டி. கே. சிவக்குமார் ஏற்பாடுதான் . இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்திட அவர் ஓயாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார்
எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.
இதில், பிரதமர் வேட்பாளர் மற்றும் கூட்டணிக்கு பெயர் வைப்பது போன்ற விவகாரங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
நேற்றைய விருந்தின்போது பேட்டி அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி,’’2004 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கம்யூனிஸ்டுகள் 61 இடங்களில் ஜெயித்தனர்.அந்த தேர்தலில் 57 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்தோம். ஆனாலும் அப்போது, மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தோம். இப்போதும் அப்படியே செயல்படுவோம்’ என்றார்.
000