ஏப்ரல்.15
ஜப்பான் நாட்டின் வயகமா பகுதியில் பிரதமர் புமியோ கிஷிடா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் திடீரென பைப் வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் பிரதமர் கிஷிடா காயங்களின்றி உயிர்தப்பினார்.
தென்மேற்கு ஜப்பானில் உள்ள வயகமா மீன்பிடித் துறைமுகத்தை அந்நாட்டுப் பிரதமர் புமியோ கிஷிடா சுற்றிப்பார்த்தார்.பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவரை உரை நிகழ்த்த தொடங்கினார். அப்போது, திடீரென பிரதமரை குறிவைத்து ஒரு நபர் பைப் வெடிகுண்டு ஒன்றை வீசி வெடிக்கச் செய்தார். அதிக சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியதில், அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
குண்டு வெடித்த சமயத்தில் பிரதமரின் பாதுகாவலர்கள் அவரை சூழ்ந்துகொண்டு பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்தத் தாக்குதல் குறித்துப் பேசிய ஜப்பானிய அதிகாரிகள், பிரதமர் கிஷிடா பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே வெளியிட்ட வீடியோ காட்சிகளில், வெடிகுண்டுத் தாக்குதலின்போது பொதுமக்கள் தப்பியோடிய காட்சிகளும், சம்பவத்தைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது இந்த பிரதமர் மீதும் இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.