பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் செயலியின் லோகோவை அதன் நிறுவனர் எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளது பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை முழுமையாக வாங்குவதாக அறிவித்தார். டுவிட்டர் நிர்வாகக் குழு மற்றும் எலான் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக ஒப்பந்தம் உறுதியானது. ஒப்பந்தம் போட்ட சில வாரங்களில், டுவிட்டரை வாங்கவில்லை என்று அறிவித்தார். அப்புறம் டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை நாட மீண்டும் இல்லை, இல்லை நான் வாங்கிக் கொள்கிறேன் என்று கூறினார்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை கையகப்படுத்தியதை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளுக்கு ப்ளூ டிக் இருந்த வந்த நிலையில், அதில் பல்வேறு நிறங்களை மாற்றி அமைத்தார்.
அதன்படி தனிநபர் அதிகாரப்பூர்வ கணக்குக்கு நீள நிறமும், வணிக கணக்குகளுக்கு தங்க நிறமும், அரசு சார்ந்த கணக்குகளுக்கு க்ரே நிறமும் என டிக்குகள் மாற்றப்பட்டது. இதன் பின்னர் சந்தா செலுத்தி பல்வேறு வசதிகள் மற்றும் அம்சங்களுடன் கூடிய டுவிட்டர் ப்ளூ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது ட்விட்டர் செயலியின் லோகோ மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டரின் அடையாளமாக கருதப்படும் நீல பறவை மாற்றப்பட்டு அதற்கு பதிலாக ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது.